பொள்ளாச்சி அருகே ஆழியாறில் வனத்துறை சார்பில், வன மரபியல் ஆராய்ச்சி மையம், மூலிகை பண்ணை கடந்த 1998-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகளின் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இங்கு 80 வகையான மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகை பண்ணைக்குள் செல்லும்போதே நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
27 நட்சத்திர விருட்சங்கள்
இந்த மூலிகை பண்ணையில், நட்சத்திர மரங்கள் என்ற தலைப்பில் உள்ள அறிவிப்பு பலகையில், 18 சித்தர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும், நான்கு மூலிகை செடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பேசிய பொள்ளாச்சி ஆராய்ச்சி வனத்துறை அதிகாரிகள், “மூலிகையின் பயன்களை, மக்கள் உணர்ந்து பயன்படுத்துகின்றனர். முன்னோர்கள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாக மூலிகைகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைகள் குறித்து, ஆராய்ச்சி செய்து அவற்றை பாதுகாக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும் மூலிகை பண்ணையில் நாற்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறோம்.
தற்போது, சங்கு புஷ்பம், ஓரிதழ் தாமரை, அம்மையன் கூந்தல், தர்பைப்புல், லெமன் கிராஸ், முடக்கத்தான், இன்சுலின், கற்பூரவள்ளி, வெட்டிவேர், மனோரஞ்சிதம், திப்பிலி, தூதுவளை, ஆடாதோடா, நாராயண சஞ்சீவி உள்ளிட்ட 80 வகையான மூலிகை செடிகள் உள்ளன.
நாற்றுகள் 10 ரூபாய் விலையில் வழங்கப்படுகின்றன. மூலிகைச் செடிகள் வேண்டுவோர், பண்ணையில் பெற்றுக்கொள்ளலாம்” என்றனர்.