“உளுந்து ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. உளுந்து சாகுபடியின் போது கந்தகச்சத்து பற்றாக்குறையால் செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்பட்டு, படிப்படியாக முழு செடியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். இதை நிவர்த்தி செய்ய, கால்சியம் சல்பேட் கரைசலை இலைவழி தெளிப்பாக தெளிக்கவும்.
துத்தநாக சத்து பற்றாக்குறையால், இளம் இலைகள் சிறியவையாகவும், கணுவிடைப்பகுதிகள் குறுகி, இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நுனியில் கொத்தாக வளர்ந்து, கொத்து இலைநோய் போல் காணப்படும். ஜிங்க் சல்பேட் கரைசலை இலை வழியாக, 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும். போரான் சத்து பற்றாக்குறை இருந்தால், தண்டினுடைய மேல் கணுவிடை பகுதிகள் சிறுத்து இருக்கும். ரோஜா பூ இதழ் போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கும்.
வளர் முனைக்கு அருகில் இருக்கும் மேல் இலைகள், மஞ்சள் நிறமாகவும் சில சமயங்களில், சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதற்கு 0.2 சதவிகிதம் போராக்ஸ் கரைசலை இரண்டு வார இடைவெளியில் இலை வழியாக தெளிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால், விவசாயிகள் நல்ல மகசூலை ஈட்டலாம்” என கோயம்புத்தூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நர்கீஸ் தெரிவித்துள்ளார்.