பயிரின் வளர்ச்சி பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் காய்த்துளைப்பான்களும் அதிக அளவு காணப்படும். வயலில் பூச்சி மருந்து பயன்படுத்துவதற்கு முன்பு, பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்குக் குறைவாக உள்ளது… அதாவது காய் துளைப்பான் தாக்குதல் 10 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால் ரசாயன பூச்சி கொல்லிக்குப் பதிலாக வேப்பெண்ணெய் 2 சதவிகிதம் பயன்படுத்தலாம். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலை 10 சதவிகிதத்திற்கு மேல் சென்றால் ‘இமாமெக்டின் பென்சோயேட்’ (Emamectin benzoate) 5 %, SG 220 கிராம்/எக்டர் என்ற அளவில் கலந்து தெளிப்பதால் காய் துளைப்பான் கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகமாகக் கிடைக்கும். மேலும் பயிரின் இளம் பருவத்தில் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் (Imidacloprid) என்ற மருந்தை 100-125 மில்லி/எக்டர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். மேலும் வயலில் காய் துளைப்பான் புழுக்களைக் கட்டுப்படுத்த இயற்கையான முறையில் பறவைகள் அமரும் குச்சிகளை 50 எண்கள்/எக்டர் என்ற அளவில், இனக்கவர்ச்சி பொறி 12 எண்கள்/எக்டர் என்ற அளவில், சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ-ஐ கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி எக்டருக்கு 10 எண்கள் என்ற அளவில் அமைத்து பூச்சிகளின் தாக்குதலைப் பொருளாதார சேத நிலைக்குச் செல்லாமல் தடுக்கலாம். இதனால், வயலில் நன்மை செய்யும் பூச்சிகள் பெருக்கமடைந்து காய் புழுக்களின் முட்டைகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கும். இதனால் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமலேயே அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கின்றன.