திருவாலங்காடு ஒன்றியத்தில் வியாசபுரம், பூனிமாங்காடு, மணவூர் உள்ளிட்ட கிராமங்களில் கத்திரிக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, கத்திரி சிற்றிலை நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதால் அதை தடுக்க திருவாலங்காடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சரத்குமார் “கத்திரிக்காய் செடி நடப்பட்டு, 10 முதல் 20 நாட்களான பயிரில், தற்போதுள்ள காலநிலையில் கத்திரி சிற்றிலை நோய் பரவ வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்கப்பட்டுள்ள செடிகள் குட்டையாகவும், இலைகள் சிறுத்தும் காணப்படும். இச்செடிகள் பூக்காமல் மலடாக மாறிவிடும். இது ஒருவகை நச்சுயிரி நோயாகும். மேலும், சாறு உறிஞ்சும் பூச்சிகளால் இந்நோய் அதிகளவில் பரவுகிறது. தாக்குதலுக்குள்ளான செடிகளை வேருடன் பிடுங்கி எரித்து அழித்துவிட வேண்டும்.
கத்திரியில் சிற்றிலை நோய் பரவுவதை கட்டுப்படுத்த, 1 லிட்டர் நீருக்கு ‘தியாமெதோக்சம்’ எனும் மருந்தை, 0.5 கிராம் கலந்து அல்லது ‘இமிடாகுளோப்ரிட்’ 2 மி.லி கலந்து கத்திரி நாற்றுகள் நடப்பட்ட 20, 40 மற்றும் 60 நாட்களில் தெளித்தால் நோய் பரவும் காரணியை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 86082 28276 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்” என அதற்கான வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார்.