நாடு முழுதும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் வேளாண் காப்பீடு நிறுவனம், கூட்டுறவு நிறுவனமான இப்கோ-டோக்கியோ, யுனிவர்சல் சம்போ, ப்யூச்சர் ஜெனரலி, எச்.டி.எப்.சி ஆகிய ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
சென்னை நீங்கலாக 37 மாவட்டங்கள் அதிக பாதிப்பு உள்ளவை மற்றும் குறைந்த பாதிப்பு உள்ளவை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி அதிக மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இப்கோ- டோக்கியோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சம்பா நெல் சாகுபடி காலம் துவங்க உள்ளது. செப்டம்பர் 1 முதல் காப்பீடு பதிவு பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.