Online News Portal on Agriculture

தென்னை மரங்களுக்கு காப்பீடு… வேளாண்துறை அழைப்பு…

0 45

பல்வேறு காரணங்களால், தென்னை மரங்கள் பாதிக்கும்போது இழப்பை தவிர்க்க, தென்னைக்கு காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என வேளாண்துறை அறிவித்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தென்னை விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.

தென்னைக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தென்னை காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் இணைந்துகொள்ள வேளாண்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உடுமலை வேளாண் உதவி இயக்குநர் தேவி,” தென்னை மரங்களில், குட்டை மற்றும் கலப்பின மரங்கள், 4 முதல் 60 வயதான மரங்கள், நெட்டை மரங்கள், 7 முதல் 70 வயது வரையிலான மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஆண்டுக்கு, 30 காய்களுக்கு மேல் மகசூல் பெறக்கூடிய மரங்கள் காப்பீடு செய்ய தகுதியானதாகும். ஆரோக்கியமற்ற, முதுமையடைந்த மரங்கள், பூச்சிநோய் தாக்கிய மரங்கள் தகுதியற்றதாகும்.

புயல், வெள்ள பாதிப்பு, பூச்சிநோய் பாதிக்கப்பட்டால், தீ, நிலநடுக்கம் மற்றும் வறட்சியினால் பெருத்த சேதம் ஏற்படும்போது, இழப்பீடு பெற முடியும். மரங்கள் எதிர்பாராவிதமாக மடிந்துவிடுவதால், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்னை மரங்கள் காப்பீடு திட்டத்தில், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவிகிதம், மாநில அரசு 25 சதவிகிதம் மற்றும் விவசாயிகள் 25 சதவிகிதம் என்ற அடிப்படையில் பிரிமியம் தொகை செலுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், விவசாயிகள் பங்களிப்பு தொகையாக மரம் ஒன்றுக்கு 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு 2.25 ரூபாய் மற்றும் 16 முதல், 60 வயதுடைய மரங்களுக்கு 3.50 ரூபாய் செலுத்த வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு தலா 900 ரூபாயும், 16 முதல் 60 வயதுடைய மரங்களுக்கு 1,750 ரூபாய் இழப்பீடு தொகையாக பெறலாம்.

தென்னை இன்சூரன்ஸ் ஒரு ஆண்டுக்கு செலுத்தக்கூடியதாகும். ஒரு ஆண்டிற்குள் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு தொகை பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் புதுப்பிக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பங்கள் வேளாண் அலுவலகங்களில் உள்ளது. தென்னை மரங்கள் ஆய்வுசெய்து, எண்கள் இடப்பட்டு, உரிய போட்டோவுடன் காப்பீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான விண்ணப்பம் மற்றும் பிற விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் ஆபத்தை குறைக்கவும், மரம் ஏறும் பணிக்கு வருபவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்காக ‘கேரா சுரஷா காப்பீடு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒரு நபருக்கு ஆண்டு பிரிமியம் தொகை 3.75 ரூபாய் ஆகும். இதில், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் பங்கு தொகையாக 251 ரூபாய் செலுத்துகிறது. மரம் ஏறும் தொழிலாளர்கள் 94 ரூபாய் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் இணையும் மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு 5,00,000 ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.