டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடியை துவங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, நிலத்தடி நீராதாரம் உள்ள இடங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள வேளாண்துறை முடிவு செய்துள்ளது. நீர் பற்றாக்குறை நிலவும் இடங்களில் நெல்லுக்கு மாற்றாக சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல நாடுகளில் சோயா தேவை அதிகமாக உள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சோயா சாகுபடி நடைபெறுகிறது. அமெரிக்கா, இலங்கை, தெற்கு கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சோயா சாகுபடி செய்வதால், ஏக்கருக்கு 1,20,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். நீர் தேவையும் குறைவு. ஆதலால், பணப்பயிரான சோயா சாகுபடியை ஊக்குவிக்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் குறுவை நெல்லுக்கு மாற்றாக சோயா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதை வேளாண்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து சோயா சாகுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளனர்.