புதிய ரக கரும்பு பயிரை கோவை வேளாண் பல்கலை அறிமுகம் செய்யாததால் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு மாறுவது அதிகரித்து வருகிறது. இதனால் அதிக மகசூல் தரும் புதிய கரும்பு அறிமுகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் ஆலைக்கரும்பு 15,200 எக்டேரில் சாகுபடியானது. கடந்த 8 ஆண்டுகளாக சாகுபடி பரப்பு மிகவும் குறைந்து தற்போது 10,000 ஏக்கர் அளவிலேயே கரும்பு சாகுபடியாகிறது.
கோவை வேளாண் பல்கலை சார்பில் ‘மஞ்சுளா’ என்ற ரகம் 15 ஆண்டுகளுக்கு முன் சாகுபடியில் இருந்தது. அப்பயிர் ஒரு ஏக்கருக்கு 50 டன்னுக்கு மேல் மகசூல் கிடைத்தது. பயிரிட்ட விவசாயிகள் பயனடைந்தனர். அதன் பின் மாவட்ட வேளாண்துறை ‘86032’ என்ற வீரியமிக்க அதிக மகசூல் தரும் கரும்ப பயிரை அறிமுகம் செய்தது. படிப்படியாக அப்பயிர் மகசூல் அளவும் குறைந்தது. தற்போது மகசூல் அதிகம் கிடைக்காத காரனத்தால் கரும்பு விவசாயிகள் மாற்றுப்பயிரை நோக்கி திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி பரப்பு 10,000 என குறைந்துள்ளது. இதனால் புதிய ரக கரும்பை கோவை வேளாண் பல்கலையில் இருந்து பெற்று, மாவட்ட வேளாண்துறை அறிமுகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியன், “10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கரும்பு பயிரை சாகுபடி முறையில் மாற்றுவது வேளாண் துறையின் வழக்கம். ஏனெனில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் தர வேண்டும் என மாற்றினர். அதன்படி 25 ஆண்டுகளூக்கு முன் ‘மஞ்சுளா’ ரக கரும்பு நல்ல மகசூல் தந்தது. அதன்படி ‘86032’ ரகம் சாகுபடிக்காக அறிமுகப்படுத்தினர். தற்போது அப்பயிரும் அறிமுகமாகி 10 10 ஆண்டுகளை கடந்து விட்டதால் மகசூல் திறன் குறைந்துவிட்டது. இதனால் மகசூல் திறன் அதிகமுள்ள புதிய கரும்புப்பயிரை வேளாண் பல்கலை ஒப்புதலுடன் அறிமுகம் செய்ய வேண்டும்” என்றார்.