நுண்ணுயிர்கள், பூஞ்சை காளானில் உள்ள கிருமிகளால், கறவை மாடுகளுக்கு மடிநோய் ஏற்படுகிறது. இவற்றால் மடிவீக்கம், மடி சூடாக இருத்தல், காம்பு வீங்குதல், சிவந்து காணப்படுதல், பாலின் நிறம் மற்றும் தரம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு முன், மாடுகள் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர்தான், பால் மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதித்து மடிநோயை உறுதி செய்தனர். இந்நோய்க்கு உள்ளாகும் மாடுகளிடம், பால் சுரப்பது குறைந்து, அவை குணப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இந்நிலையில், ‘சிமெர்டெக்’ என்ற நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து மடிநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை மாட்டின் உரிமையாளரே பயன்படுத்தி மடிநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று உறுதிசெய்து உடனடி சிகிச்சை அளிக்க முடியும்.
இதுகுறித்து பேசிய கால்நடை மருத்துவ நல மைய இயக்குநர் சௌந்தரராஜன், ” கறவை மாடுகளுக்கு மடிநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வகங்களில்தான் பரிசோதிக்க முடியும். புதிய கண்டுபிடிப்பு வாயிலாக, மாடு வளர்ப்போர் தங்கள் வீடுகள், பண்ணைகளிலேயே பரிசோதனை செய்துகொள்ள முடியும். பால் கறக்கும்போது, அக்கருவியை கொண்டு பரிசோதிக்கும்போது, மாட்டிற்கு மடிநோய் பாதிப்பு இருக்கிறதா, பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம்.
இந்நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள, மாடுகள் கட்டப்படும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். வாரம் ஒருமுறை ‘பிளீச்சிங் பவுடர்’ கிருமிநாசினி கலந்த நீரால், கொட்டகையை சுத்தப்படுத்த வேண்டும். பால் கறப்பதற்கு முன், ‘பொட்டாசியம் பெர்மாங்கனேட்’ மருந்து உதவியுடன், மடி மற்றும் கறப்பவர்களின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மடிநோய் பாதிப்பில் அதிக அளவு நோய் கிருமிகள் இருக்கும் என்பதால், மாடு உரிமையாளர்கள், பால் கறந்த உடனேயே மட்டை படுக்க வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக மாட்டிற்கு ஏதேனும் தீனி போட்டு நிற்க வைக்க வேண்டும்” என்றார்.
இந்த கருவி தேவைப்படுவோர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் viftanuvas@gmail.com என்ற இ-மெயில் அல்லது 044 2555 2377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.