மல்லிகை சாகுபடி பரப்பை அதிகரிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 எக்டேர் வரை மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், ஒரு எக்டேருக்கு 40 சதவிகித மானியமாக 16,000 ரூபாய் மதிப்புள்ள மல்லிகை பதியன்கள் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டேர் வரை இலவச மல்லிகை பதியன்கள் தரப்படும்.
மல்லிகை தோட்டங்களில் சேதமடைந்த செடிகளுக்கு பதிலாக புதிய பதியன்கள் நடுவதற்கு ஒரு எக்டேருக்கு 20,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் அளவிற்கு மானியம் வழங்கப்படும். அறுவடை செய்த பூக்களை தரம் குறையாமல் விற்பனை செய்ய, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின்கீழ் குளிர்சாதனப்பெட்டி வாங்குவதற்கு 40 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
பயன்பெற விரும்புவோர் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/ இணையதளத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.