ஆட்டுக்குட்டிகளுக்கு, ரத்த கழிச்சலை கட்டுப்படுத்துவது குறித்து பேசிய செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர் துரைராஜன், ” வெள்ளாட்டு குட்டிகளுக்கு ‘எய்மீரியா’ வகை ஓரணு ஒட்டுண்ணியல், ரத்த கழிச்சல் நோய் தாக்கம் ஏற்படும். 4 முதல் 6 மாத வெள்ளாடு குட்டிகளை அதிகமாக தாக்கும். குறிப்பாக, சாணத்தின் வழியாக ஒட்டுண்ணி முட்டைகள் வெளியேறி, தண்ணீர் மற்றும் தீவனம் வாயிலாக நோய் பரவும். மேலும், 50 சதவிகிதம் குடல் தாக்குதல் ஏற்பட்டு, உயிர் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் உடல் எடை மெலிந்து காணப்படும். சளி, ரத்தம் கலந்த கழிச்சல் கழித்து, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், பின்னங்கால்கள் செயலிழக்க நேரிடும்.
இதை தடுக்க தண்ணீர், தீவனத்தில் 100 கிராம் ஆம்ப்ரோலியம், 135 மி.லி சல்பாடிமிடின் மருந்தை தொடர்ந்து 7 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். கொட்டகையில் 2 சதவிகித சோடியம் ஹைட்ராக்ஸைடு அல்லது 10 சதவிகித அம்மோனியா கரைசலைத் தெளிக்க வேண்டும்” என்றார்.