நடப்பு ராபி பருவத்திற்கு, நெல், மக்காச்சோளம், கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உடுமலை வேளாண் உதவி இயக்குநர் தேவி, “ராபி பருவத்தில், அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடவு செய்த, நெல் சாகுபடி விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 563 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 15.
மக்காச்சோளம் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் விதைத்த விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 535 ரூபாய் தொகை செலுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 30.
சோளம் விதைத்துள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு 46 ரூபாய் செலுத்தி டிசம்பர் 15-ம் தேதிக்கு முன்பாகவும், கொண்டைக்கடலை விதைக்கும் விவசாயிகள் நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பாகவும் காப்பீட்டுத் தொகையாக, ஒரு ஏக்கருக்கு 210 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உறுதிசெய்து கொள்ள வேண்டும். பயிர்க்காப்பீடு செய்ய, விதைத்த நிலத்தின் சர்வே எண், சிட்டா, நடப்பு ஆண்டிற்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன், பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீட்டு தொகையுடன், பொது இ-சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பதிவு செய்து, பதிவிற்கான ரசீதினை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.