“விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பம்” பற்றி பேசிய தெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகபசுபதி “மானாவாரி சாகுபடியில் பெரும்பாலும் சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் நல்ல மகசூல் பெற விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பம் உதவிகரமாக உள்ளது.
விதையை கடினப்படுத்தும்போது, விதைகளுக்கு முதலில் கட்டுப்படுத்தப்பட்ட நீரேற்றம் செய்யப்பட்டு விதை முளைப்பதற்கு முந்தைய வளர்சிதை மாற்ற நிகழ்வு தூண்டப்படுகிறது. அதன்பிறகு, இவ்விதைகளில் இருந்து நீர் இழப்பு செய்யப்படுகிறது. இதனால், முளைப்பதற்காக உயிர் வேதிவினைகள், தற்காலிகமாக அப்படியே நிறுத்தப்படுகிறது. இதேநிலையில் விதைப்பதற்கு கடினப்படுத்தப்பட்ட விதைகளாக இந்த விதைகள் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு விதையை கடினப்படுத்துவதால் முளைப்புத்திறன் வேகமும், சதவிகிதமும் அதிகரிக்கிறது. மானாவாரி சாகுபடியில், சரியான அளவில் பயிர் எண்ணிக்கை பராமரிக்க விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பம் உதவுகிறது. பயிர்களில் வறட்சித்தன்மை தாங்கும் திறன் அதிகரிக்கிறது. பொதுவாக விதகளை, தேவையான அளவு நீர் அல்லது ரசாயன கரைசலில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை, பழைய ஈரப்பத அளவு வரும் வரை நிழலில் உலர வைக்க வேண்டும்.
சிறுதானிய வகைகளில், ஒரு கிலோ விதையை, 20 கிராம் ‘பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்’, ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கரைசலில், ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பயறு வகைகளில், ஒரு கிலோ விதையை, 2 கிராம் ‘கால்சியம் குளோரைடு’, ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கரைசலில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்து விதை ஒரு கிலோவை, 300 மில்லி கிராம் ‘மாங்கனீசு சல்பேட்’ கலந்த ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
அனைத்து வகை பயிர்களிலும், ஒரு கிலோ விதையை 3 முதல் 5 லிட்டர் தண்ணீரில், 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். எனவே, குறைந்த செலவு கொண்டு இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்” என்றார்.