விவசாயத்திற்கு சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு என அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில், மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில், விரைவாக இணைப்பு பெற, ‘தத்கல்’ திட்டமும் உள்ளது. தற்போது, 3 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தாண்டில், 50,000 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதில் சாதாரணம், சுயநிதி பிரிவில் வழங்கப்பட வேண்டிய இணைப்புகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ‘தத்கல்’ திட்டத்தில் விண்ணப்பம் பெறும் பணி துவங்கியுள்ளது.
இத்திட்டத்தில், 5 குதிரை திறன் வரையிலான இணைப்புக்கு, 2,50,000 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், 5 முதல் 7.50 குதிரை திறன் வரை 2,75,000 ரூபாய், 7.50 முதல் 10 குதிரை திறன் வரை 3,00,000 ரூபாய், 10 முதல் 15 குதிரை திறனுக்கு 4,00,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் இணைப்பு பெற விரும்புவோர், மின்வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்த விவசாயிகள், விரைவு திட்டத்திற்கு மாற விரும்பினால், செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடிதம் கொடுக்க வேண்டும். முழு கட்டணமும் செலுத்துவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.