தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறைகளை, வேளாண் துறையுடன் இணைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் காய்கறிகள், பழங்கள், வாசனை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்துறையில் இருந்து, தோட்டக்கலைத் துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த உழவர் அலுவலர் தொடர்புத்திட்டம் 2.0 திட்டத்தின்படி தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளை படிப்படியாக, வேளாண் துறையுடன் இணைக்கும் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
உதவி அலுவலர்களுக்கு பதிலாக, நான்கு ஊராட்சிகளுக்கு சேர்த்து, ஒரு விரிவாக்க அலுவலர் நியமிக்கப்பட உள்ளார். இந்த விரிவாக்க அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட மற்ற துறைகளின் பணிகளை ஒருங்கிணைப்பார்கள். விரிவாக்க அலுவலர் பணிக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, வேளாண் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கை கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, தோட்டக்கலைத் துறை பயிர்கள் சாகுபடி பரப்பு குறையும் என்பதால், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.