கோயம்புத்தூரில் உள்ள பெரிய குளம், செல்வ சிந்தாமணி குளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட வெட்டிவேர் மிதவை தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வாளர், பேராசிரியர் சாரா பர்வீன் பானு கடந்த ஆறு ஆண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய பேராசிரியர் சாரா பர்வீன் பானு, ” ஏரி நீரின் தரத்தை மீட்டெடுக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கோயம்புத்தூரில் உள்ள பெரிய குளம், செல்வ சிந்தாமணி குளத்தின் தண்ணீரை ஆய்வு செய்தபோது அதன் குறியீடு 32-33 என்ற அளவீட்டில் இருந்தது. இக்குறியீடு தண்ணீரின் தரம் குறைவு என்பதை தெளிவாக காட்டுகிறது, இதற்காக வெட்டிவேர் மிதவை அமைப்பை பொருத்தினோம். பல்கலைக்கழக வளாகத்தில் செயற்கை குளம் அமைத்து, கழிவுகளை கொட்டி அதில் அமைப்பை உருவாக்கி ஆய்வு செய்கிறோம். வெட்டிவேரின் பிரமாண்ட வேர்கள் ஒரு உயிர் வினைகலனாகச் செயல்பட்டு கழிவுநீரில் இருக்கும் 80 சதவிகிதத்துக்கு அதிகமான உலோகங்களை நீக்குகின்றன. புற்றுநோய் உண்டாக்கும் குரோமியத்தின் நச்சுத்தன்மையை இதன் வேர்கள் வடிகட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மிதவை அமைப்பை பயன்படுத்தி தொழிற்சாலை கழிவுநீர், ஏரி நீரை சுத்திகரிக்க ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த அமைப்புக்கு காப்புரிமை பதிவு செய்துள்ளோம்” என்றார்.
இதன் செயல்பாடுகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணை பொது இயக்குநர் அகர்வால், பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.