வாழைநாரை மதிப்புக்கூட்டி பலவிதமான பொருட்கள் செய்வதற்கான பயிற்சி மற்றும் இயந்திரங்களை வழங்கி வரும் கோயம்புத்தூர், எக்கோ கிரீன் அமைப்பைச் சேர்ந்த பாபு, ”வாழை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாமிடத்திலும் உள்ளது. ஜப்பான் கரன்சியான ‘யென்’ தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான வாழை நார் பிரேசிலிலிருந்து ஏற்றுமதியாகிறது. ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு நமது தொழில்நுட்பம் செல்கிறது. இன்றைக்கு வாழைநாரின் தேவைகள் அதிகமாக உள்ளது. ஐரோப்பிய மார்க்கெட்டில் வாழைநாரின் பயன்பாடு நன்றாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் எங்களிடமிருந்து இயந்திரங்கள் வாங்கி செல்கிறார்கள். இதில் ஏராளமான தொழில்முனைவோர் வந்தாலும் கழிவுகளிலிருந்து உபயோகமான பொருட்கள் தயாரிக்கும் பணிகள் நன்றாகப் போகும். ஜெர்மனியில் வீட்டு அலங்காரம், மேட் போன்ற வாழைநாரில் தயாரிக்கப்பட்ட பொருட்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் 5 லட்சம் தொழில்முனைவோர்கள் வாழைநார் மூலம் பொருட்களை உற்பத்தி செய்தாலே ஏற்றுமதி மூலம், அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். வாழைநார் பிரித்தெடுத்தல், வாழைநார் கைவினைப்பொருட்கள், மேட் தயாரித்தல் போன்ற அனைத்து விதமான பயிற்சிகளையும் நாங்கள் கொடுக்கிறோம். நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் எங்களுடைய பயிற்சி மையம் உள்ளது. பல நாடுகளுக்கும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்கிறோம்.
வங்கிகள் ‘முத்ரா’ திட்டத்தில் கடனுதவி அளிக்கின்றன. மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை மானியம் கொடுக்கப்படுகிறது. தொழில் ஆரம்பிக்க இது சரியான தருணம். இதுவரை நாங்கள் வாழைநார் பொருட்கள் உற்பத்தியில் உலக அளவில் 15,000 தொழில் முனைவோரை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.