கோவில்பட்டி வட்டாரத்தில், 25,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள்பற்றி வட்டார வேளாண்மை இயக்குநர் நாகராஜ் கூறுகையில் “விவசாயிகள் மக்காச்சோள பயிரை மானாவாரி வயல்களில் விதைக்கும்போது, வயலைச் சுற்றி வரப்புப் பயிராக 4 வரிசையில் நாற்றுச்சோளமும், தோட்டக்கால் பகுதியில் 4 வரிசையில் தட்டைப்பயிர், எள், சூரியகாந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விதைக்க வேண்டும். தோட்டக்கால் பகுதிகளில் ஊடுபயிராக உளுந்து அல்லது பாசிப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
பயிர் விதைத்த ஒரு வாரம் முதல். விவசாயிகள் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து இலையின் மேல்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டை குவியல்கள் மற்றும் இளம் புழுக்களைக் கையால் சேகரித்து அழிக்க வேண்டும். தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, ஒரு எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்தல் வேண்டும். மக்காச்சோள பயிரில் முன்குருத்து பருவத்தில் ( விதைப்பு செய்து 15 முதல் 20 நாட்கள்) படப்புழுவின் தாக்குதல் தென்பட்டால், குளோரான்டிரினிலிடிரோல் (18.5 எஸ்.சி) 4 மி.லி அல்லது அசாடிரக்டின் (1 சதவீதம்) 50மி.லி, 10லிட்டர் தண்ணீரில் கலந்து வயலில் தெளித்து புழுவினை கட்டுப்படுத்தலாம்.
பூக்கும் பருவத்திலும் (விதைத்த 60 நாட்களுக்குமேல்) புழுக்கள் தென்பட்டால் குருத்து பருவத்தில் தெளிக்காத மருந்துகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி புழுவைக் கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் மக்காச்சோள பயிரில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துகளை மட்டுமே உரிய அளவில் பயன்படுத்தி குருத்து பகுதியில் தெளித்தல் வேண்டும்” என்றார்.