கேழ்வரகு பயிரில் விளைச்சலை அதிகரிக்கும் TNAU ராகி பூஸ்டர்
ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்
ஊட்டச்சத்துக்ககள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் கலவை மூலம் கேழ்வரகில் மகசூலை மேம்படுத்துதல்
கேழ்வரகு ஆப்பிரிக்க கண்டத்தில் உருவானது, ஆயிரம் ஆயிரமாண்டுகளாக உகாண்டா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்துள்ளது ஹரப்பா நாகரீகம் தொடர்பான தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.மற்ற சிறுதானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கிற்கு கேழ்வரகில் கால்சியம் உள்ளது. மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன. எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.
கேழ்வரகு இந்திய தட்ப வெட்ப நிலைக்கு முற்றிலும் ஏற்புடையதாகும். பலவிதமான சீதோஷண நிலையிலும் வளரக்கூடியது. 2023-24 ஆம் ஆண்டில் 10.37 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) படி, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த தினை (ராகி) உற்பத்தி 13.86 லட்சம் டன்கள் ஆகும். தமிழ் நாட்டில் 2023-24ஆம் ஆண்டில் 0.63 (0.63) லட்சம் ஹெக்டரில் 1.89 லட்சம் டன்களாக உற்பத்தி செய்யப்பட்டது. உற்பத்தி திறனானது ஒரு ஹெக்டருக்கு 2989 கிலோ ஆகும் .கேழ்வரகு ஒரு முக்கியமான சிறுதானியப் பயிராகும். கேழ்வரகில் நீண்ட கால சேமிப்பு திறன் கொண்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த பயிராகும்.நீர்ப்பாசன நிலம் மற்றும் மானாவாரி நிலங்கள் என இரண்டிற்கும் பொருத்தமான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும் அதன் விளைச்சலானது மிகக் குறைவாகவே உள்ளது. ஏனெனில், அதன் மரபணு வகைகள் இயல்பாகவே சத்துக்களை ஒருங்கிணைக்கும் திறனைக் குறைவாகக் கொண்டுள்ளன. கேழ்வரகானது உகந்த சூழலில் எக்டருக்கு 40-50 குவிண்டால் வரை அதிக விளைச்சல் தரும் திறன் உடையது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் பயிர் வினையியல் துறையின் மூலம் ராகி பயிரில் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் குறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணப்பாறை நல்லாம்பிள்ளை கிராமத்தில் விவசாயிகளின் தோட்டத்தில் ராகி பயிரில் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் தெளிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது . பரிசோதனை முடிவுகளின் படி குறிப்பிட்ட பருவத்தில் தகுந்த அளவில் உரமிடுதலின் மூலம் பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம். கேழ்வரகின் மகசூலை அதிகரிக்க, வினையியல் ரீதியாக சத்துக்களை உட்கிரகிக்கும் வகையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம். ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலவையை பயிரின் சரியான வளர்பருவத்தில் தெளிப்பதன் மூலம் வினையியல் செயல்பாடுகளை மேம்படுத்தி விளைச்சலை அதிகரிக்கலாம். தாவரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க இலைவழித் தெளிப்பானது ஒரு முக்கியமான தொழில்நுட்பமாகும். ஏனெனில், பயிரின் வளர்ச்சி நிலைகளில் இவ்வாறு தெளிப்பு செய்வதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலவையை ஒருங்கிணைத்து தாவரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றன. குறுகிய காலத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மண்ணில் உரமிடுதலை விட இலைவழித் தெளிப்பு செய்வது ஊட்டச்சத்து பயன்பாட்டை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது.
கட்டுரையாளர்கள்
முனைவர் எஸ்.நித்திலா
இணை பேராசிரியர் ( பயிர் வினையியல்)
மகளீர் தோட்டக்கலை கல்லூரி , திருச்சி
முனைவர் என்.ஸ்ரீதரன்
இணை பேராசிரியர் (பயிர் வினையியல்)
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவை