கொடைக்கானல் கீழ் மலையடிவாரப் பகுதியில் அய்யம்பாளையம் உள்ளது. இதன் அருகிலுள்ள கிராமங்களான ஆத்தூர், சித்தையன்கோட்டை, பட்டிவீரன்பட்டி, கோம்பை, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நாட்டுரக நெட்டை தென்னை மரங்கள் உள்ளன.
இந்த மரங்கள் பல தலைமுறைகள் கடந்து பலன் தருகின்றன. இவை நடவு செய்த 5-வது ஆண்டில் பலன் தர தொடங்குகிறது. 100 அடி முதல் 115 அடி வரை வளர்கிறது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 150 காய்கள் வரை காய்க்கின்றன. பாரம்பரிய நாட்டு ரகம் என்பதால் குட்டை தென்னை, ஹைபிரிட் ரக தென்னை மரங்களைப் போல் நோய் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. இதுகுறித்து 3 தலைமுறையாக நெட்டை தென்னை மரங்களை பராமரித்து வரும் விவசாயி ரசூல்மொகைதீன், “அய்யம்பாளையம் நெட்டை தென்னை மரங்கள் நாட்டுமர வகையைச் சார்ந்தவை. எனது தந்தை சிறுவயதாக இருந்தபோதே பலன் தர தொடங்கியது. இந்த மரங்கள் இன்று 3வது தலைமுறையாக காய்த்து வருகிறது. அய்யம்பாளையம் பகுதிகளில்தான் இவ்வகை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
தற்போது வெளியூர்களுக்கு இந்த மரக்கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருமுறை தென்னையை நடவு செய்தால் போதும். பராமரிப்பு அதிகம் தேவை இல்லை. மற்ற தென்னை மரங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டபோதும், நாட்டுரக தென்னை மரத்துக்கு பாதிப்பில்லை.
100 அடிக்கு மேல் வளரும் இந்த வகை மரங்களில் முன்பு ஆட்களே ஏறி காய்களைப் பறித்தனர். தற்போது இயந்திரங்கள் வந்து விட்டதால் பறிப்பது எளிதாக உள்ளது. ஒரு கன்று ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம்.
எனது தோட்டத்தில் 100 ஆண்டுகள் கடந்து நிற்கும் நெட்டை தென்னை மரங்களை வேளாண் விஞ்ஞானிகள், தென்னை வளர்ச்சி வாரிய வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அவற்றின் வயதைக் கண்டறிந்தால், அய்யம்பாளையம் நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு பெற ஏதுவாக இருக்கும்.
இதன் மூலம், பாரம்பரிய நாட்டுரக நெட்டை தென்னை மரங்கள் காப்பாற்றப்படுவதுடன் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேரும்” என்று கூறினார்.