Online News Portal on Agriculture

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணி துவக்கம்… கால்நடைத்துறை புது முயற்சி…

0 42

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில், முதல்முறையாக அனைத்து வகையான ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் – பி.பி.ஆர்., தடுப்பூசி போடும் பணியை, கால்நடை துறையினர் துவங்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் கால்நடை துறையின் உதவி இயக்குநர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு, 20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் 2.82 லட்சம் கறவை பசுக்கள் மற்றும் மாடுகள், 51,000 எருமைகள் என மொத்தம், 3.33 லட்சம் மாடுகள் உள்ளன.

மேலும், 63,164 செம்மறி ஆடுகள், 2,42,406 வெள்ளாடுகள் என மொத்தம், 3,05,570 ஆடுகள், 7.56 லட்சம் கோழிகள், 1,773 செல்ல பிராணிகள் உள்ளன. இவைகளுக்கு, ஐந்து கால்நடை மருத்துவமனைகள், 90 கால்நடை மருந்தகங்கள், 31 கிளை நிலையங்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு இருமுறை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்ரன. இதுதவிர, தினமும் காலை 2.00 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையும் மாடு, ஆடு மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை, நோய் தாக்கப்படும் ஆடுகளுக்கு மட்டும் கால்நடை துறையினர் தடுப்பூசி போட்டு வந்தனர். சில மாதங்கலாக ஆடுகளுக்கு திடீரென நோய் தாக்கி இறந்து வந்தது. இதனால், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வந்தனர். இறந்த பெரும்பாலான ஆடுகள், ஆட்டுக்கொல்லி நோய் தாக்கி இறந்துள்ளதாக கால்நடை துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து அனைத்து வகை ஆடுகளுக்கும் பி.பி.ஆர் என்ற ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடுவதற்கு தீர்மானித்து மாவட்ட கால்நடை துறை இணை இயக்குநர் அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றார்.

இந்த தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களுக்கு அனுப்பி வைத்து, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு முதன்முறையாக தடுப்பூசி போடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி, “மாவட்டத்தில் முதல்முறையாக அனைத்து வகையான ஆடுகளுக்கு பி.பி.ஆர் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

நோய் தாக்கும் ஆடுகளுக்கு உடனே தடுப்பூசி போட்டால், எளிதில் ஆடுகளை காப்பாற்ற முடியும். மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்களில் தற்போது இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுதவிர, கிராமங்களில் உதவி மருத்துவர்கள் தலைமையில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்படும். நடப்பாண்டில், திருத்தணியில் 92,800 ஆடுகள், திருவள்ளூர் 92,100 பொன்னேரி 1,05,300, அம்பத்தூர் 15,800 ஆடுகள் என நான்கு உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக மொத்தம், 3,06,000 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒருமுரை கட்டாயம் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும்” என்று கூறினார்.

நோய் அறிகுறி, தடுக்கும் முறை குறித்து பேசிய திருவள்ளூர் கால்நடை துறை அதிகாரி, “ஆடுகளுக்கு அதிக காய்ச்சல், சோர்வு, சளி வடிதல், வாயின் உட்புறங்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்படுதல் உள்ளிட்டவை நோயின் அறிகுறிகள், நோய் தாக்கியுள்ள ஆடுகள், பிற ஆடுகளுடன் கலந்தால் எளிதில் நோய் பரவும். நோய் தாக்கிய ஆடுகளுக்கு உடனே தடுப்பூசி போட்டு ஆட்டு நந்தையில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். ஆட்டுக்கொட்டகை முழுதும் சுத்தப்படுத்த வேண்டும். ஆட்டுக்கொல்லி நோய் வராமல் தடுப்பதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.