Online News Portal on Agriculture

உலக தென்னை தினம்

0 25

உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை தலைமையிடமாக கொண்டு, 1969-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆசிய- பசிபிக் தென்னை கூட்டமைப்பின் நிறுவன நாளான செப்டம்பர் 2-ம் தேதியை உலக தென்னை தினமாக கொண்டாடுகிறோம். இக்கூட்டமைப்பில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 2023-ம் ஆண்டு தென்னை தின விழா, ‘வளமான எதிர்காலத்துக்கும் வளமான வாழ்வுக்கும் தென்னை வளர்ப்பு’ என்ற மைய கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும், 105 நாடுகளில், 12.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. அதில் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளின் பங்களிப்பு மட்டும், 9 மில்லியன் ஹெக்டேராகும்.

சர்வதேச அளவில் 64 மில்லியன் வேளாண் குடும்பங்களின் வாழ்வாதாரமாக தென்னை விளங்குகிறது. அதில், கடலோரம் வாழும் 10 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டில், இரண்டு மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை வேலைவாய்ப்பை வழங்குகிறது. தென்னை உற்பத்தியில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

1950-51ம் ஆண்டில், 6.30 லட்சம் ஹெக்டேராக இருந்த தென்னை சாகுபடி, தற்போது 21.53 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. காய்கள் உற்பத்தி திறனில் ஆந்திரா முதலிடமும், மேற்கு வங்கம் இரண்டாமிடமும், தமிழகம் மூன்றாமிடமும் உள்ளது. இந்தியா மொத்த தென்னை சாகுபடி பரப்பளவில், கேரளா 32.9 சதவிகிதமும், கர்நாடகா 26 சதவிகிதமும், தமிழகம் 23.5 சதவிகிதமும் உள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் 88,467 ஹெக்டேர், திருப்பூர் மாவட்டத்தில் 58,550 ஹெக்டேர் உள்ளது.

கொப்பரை தேங்காயின் விலை ஏற்றத்தாழ்வுகள் தென்னை சாகுபடியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்குகிறது. இதை சரி செய்ய ஊடுபயிர்கள் சாகுபடி, கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புடன் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தையும் பின்பற்றி அதிக லாபம் ஈட்டலாம். தென்னையில், நம் நாட்டில் 11 குட்டை, 18 நாட்டு, 20 வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன. இவற்றில், 16 ரகங்கள் இளநீர் தேவைக்கும், 35 ரகங்கள் கொப்பரைக்கும், 6 ரகங்கள் இரு பயன்பாட்டுக்கும் ஏதுவாக விளங்குகிறது. பொள்ளாச்சி போன்ற தீவிர தென்னை சாகுபடி பகுதிகளில் விதைப்பண்ணைகளை அமைப்பது விவசாயிகளிடையே பெருகி வருகிறது.

உலகளவில், தென்னை, 830 பூச்சிகள், சிலந்தி வகைகளாலும், 173 பூஞ்சாண நோய்களாலும், 78 வகை நூற்புழுக்களாலும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தேரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், சுருள் வெள்ளை ஈ தென்னை சாகுபடியை கேள்விக்குறியாக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்தது. இதைக் கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 

விவசாயிகளின் வளமான வாழ்வுக்கு அடித்தளம் அமைத்திடும் தென்னையில், பல்துறை ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆழியாறு நகர், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படுகின்றன.

பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள், ஊட்டச்சத்து உள்ளிட்ட பிற குறைபாடுகளை களையவும், உழவு, அறுவடை பணிகளை எளிமைப்படுத்த இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெட்டை, குட்டை மற்றும் வீரிய ஒட்டு ரக தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்தல், மண்புழு உர உற்பத்தி மற்றும் பயிற்சி, தென்னை டானிக் வினியோகம், தொழில்நுட்பங்கள் குறித்து தொலைதூர கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன.

கோகோ, தென்னை சார் ஊடுபயிர் சாகுபடி குறித்த பயிற்சிகள், வேளாண் விரிவாக்கப்பணிகள் என தென்னை விவசாயிகளின் நலனுக்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் பணியாற்றுகிறது. இந்த சேவைகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.