Online News Portal on Agriculture

உழவன் செயலியில் புதிய சேவை அறிமுகம்…. ரசாயன உரங்களின் பயன்பாடு குறைய வாய்ப்பு…

0 55

தமிழக வேளாண்துறை விவசாயிகள் தங்களுடைய மண்வளத்தை அறிந்து கொள்ள செயலியில் ‘தமிழ் மண்வளம் என்ற புதிய செவையை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் மண்வள அட்டையைப் பெற்று பயனடையலாம் என, வேளாண்துறை விவசாயிகளை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கான உழவன் மொபைல் போன் செயலியை இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த, 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 9 முக்கிய சேவைகளுடன் ‘உழவன் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, தமிழ் மண்வளம் என்ற புதிய சேவையுடன், 23 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே இந்த உழவன் செயலி பிரபலமாகி வருகிறது.

சேவைகள்

அரசின் மானிய திட்டங்கள், இடுபொருள் 

முன்பதிவு, இது தவிர, பயிர் காப்பீடு விவரம், அந்தந்த பகுதியில் உள்ள உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்தல், உற்பத்தி செய்யப்பட்ட விலை பொருள்களுக்கான சந்தை விலை நிலவரங்கள், வானிலை அறிவுரைகள், பூச்சி நோய் கண்காணிப்பு அதைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் வேளாண் துறையின் பரிந்துரைகள், அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், பட்டு வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் ஆகியவை குறித்து, தேவையான சேவைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் மண்வளம்

இச்சேவைகளுடன், தற்போது ‘தமிழ் மண்வளம்’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறையினர் கூறுகையில்,  “இந்தப் புதிய சேவையில் மாவட்டம், வட்டம், ஒன்றியம், ஊராட்சி, கிராமம், சர்வே எண், நிலத்தின் உரிமையாளர் உட்பிரிவு, பெயர், மொபைல் எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தால், அவரவர் நிலங்களுக்கான மண்வள அட்டை பி.டி.எஃப்., வடிவமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் உரிமையாளரின் பெயர், மாவட்டம், வட்டாரம், வருவாய் கிராமம், புல எண், உட்பிரிவு எண், மண் ஆய்வு முடிவுகள், பயிரிட உகந்த பயிர்கள் ஆகியவை குறித்த விவரங்கள் அடங்கி இருக்கும். இதன் அடிப்படையில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பயிர் செய்யலாம்.

மேலும், மண்வள அட்டையானது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களின் தற்போதைய துல்லியமான நிலையை அறிய மீண்டும் மண் ஆய்வு செய்து கொள்வது நல்லது என்றார்”.

அதிக மகசூல்

மண்வள அட்டையால், மண்ணின் தரத்தை அறிந்து, அதற்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தலாம். மண்ணுக்கும் பயிருக்கும் ஏற்ற உரங்களை ஏறத்தாழ சரியான அளவில் கொடுத்து, அதிக மகசூல் பெறலாம். ரசாயன உரங்களின் பயன்பாட்டை அதிகளவில் குறைக்கலாம். மண்ணின் வளத்துக்கு ஏற்ற பயிர்களைத் தேர்வு செய்யலாம். சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைத்து நல்ல தரமான நிலத்தை உருவாக்க முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.