Online News Portal on Agriculture

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகத்தை கடைபிடிக்க வேண்டும்

பயிர் மருத்துவ பயிற்சி முகாமில் திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை

0 203

திருச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கிரியா அறக்கட்டளை , திருச்சி மற்றும் எம். எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய உழவர் நண்பன் பயிர் மருத்துவர் பயிற்சி முகாம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக பயிற்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய வேளாண்மை இணை இயக்குனர் எம். சக்திவேல் அவர்கள் “விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் பூச்சி அல்லது நோய் வந்த பின்பு இடு பொருட்களை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே தெரிந்து கொண்டு குறைந்த அளவு இடு பொருட்களை பயன்படுத்தி பயிரைக் காப்பாற்ற முடியும். பெரும்பாலும் விவசாயிகள் ரசாயன மருந்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் . பூச்சி மற்றும் நோய் தாக்குதலை பொறுத்தவரை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் வேளாண்மை துறை மூலம் வழங்கி வருகின்ற உயிர் உரங்கள் மற்றும் உயிர் எதிரி பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இயற்கை இடுபொருட்களைபயன்படுத்தும் போது மண் வளத்தை அதிகரிக்க முடியும். இடுபொருள் செலவு கணிசமாக குறைகிறது” என்றார். மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மட்டுமல்லாது எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் மூலமும் விவசாயிகள் பாதிப்படைகிறார்கள். எதிர்பாராத வறட்சி மற்றும் மழை பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2024 25 ஆம் ஆண்டு காரியப்பருவத்தில் செயல்படுத்தப்பட உள்ளது திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில் அறிவிக்க செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பெயரில் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். உதாரணத்துக்கு நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கான பிரிமியம் தொகை ரூ.764 26 ஆகும் பிரிமியம் செலுத்த வேண்டிய இறுதி நாள் 31. 7. 2024 விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.

கருத்துரை வழங்கிய கிரியா அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கே சி சிவபாலன், பயிர் சாகுபடியில் 40 முதல் 50 சதவீதம் வரை பூச்சி நோய்கள் மற்றும் களைக் கொல்லிகளால் சேதாரம் ஏற்படுகின்றன அதிக அளவு ரசாயன இடு பொருட்களை பயன்படுத்தும் போது விளைச்சலை பாதிக்கும் தீமை செய்யும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன அத்துடன் உழவர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் , தேனீக்கள் பட்டுப்புழுக்கள் ஆகியன அழிந்து விடுகின்றன. எனவே பயிர் பாதுகாப்பில் நோய்களை கட்டுப்படுத்த எதிர் நுண்ணுயிர்கள் டிரைகோடர்மா , சூடோமோனஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் முறை பூச்சி கட்டுப்பாடு சூரிய ஒளி விளக்குப் பொறி பயன்படுத்தலாம். அதிக பொருளாதார சேத நிலை அடையும் சூழ்நிலையில்தான் ரசாயன மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றார். திருச்சி உழவர் பயிற்சி மைய துணை இயக்குனர் ஆர் .ஆனந்த செல்வி தனது சிறப்புரையில் திருச்சி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகளை உழவர் பயிற்சி மையம் நடத்தி வருகின்றது தற்பொழுது காரிப்பருவத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இந்த பயிர் மருத்துவ பயிற்சி
முகாமில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு முறைகள் குறித்து நேரடியாக செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கற்றுக்கொண்ட தொழில்நுட்ப செய்திகளை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்க உழவர் நண்பன் விவசாயிகளை கேட்டுக்கொண்டார். எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன பயிர் பாதுகாப்பு பயிற்றுநர் திரு செந்தில்குமார் பயிர்களில் சேதாரத்தை உண்டாக்கும் பூச்சிகளை உருபெருக்கி மூலம் திரையில் காண்பித்து ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை விளக்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் கொண்டு வந்த பயிர் மாதிரிகளை பரிசோதனை செய்து பயிர் பாதுகாப்பு ஆலோசனை வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நெற்பயிரை தாக்கும் பூச்சி நோய் குறித்த பயிர் பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது பயிற்சியில் லால்குடி புள்ளம்பாடி வட்டார உழவர் நண்பன் விவசாயிகள், லால்குடி வீரசேகரன் உட்பட்ட விவசாய அமைப்பினர் , முன்னோடி விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.சுகுமார் வரவேற்றார். உழவர் பயிற்சி மைய வேளாண்மை அலுவலர் ஆர் புவனேஸ்வரி நன்றி தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.