கோடையை சமாளிக்க உதவும் பொருட்களில் முக்கிய இடம் நன்னாரி சர்பத்துக்கு உண்டு. சர்பத் வெயிலிலிருந்து நம்மைக் குளிர்விப்பது போல, அதில் உள்ள நன்னாரி, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்து மனதைக் குளிர வைக்கிறது. வனங்களில் தானாக விளைந்து கிடக்கும் நன்னாரி கிழங்கைச் சேகரித்து, பயன்படுத்தி வந்த காலம் போய் இன்றைக்கு விவசாய நிலங்களில் நன்னாரியை சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள். ஆந்திரா மாநிலத்தில் பெரும்பாலான விவசாயிகள் இதைச் சாகுபடி செய்து வந்தாலும், தமிழகத்தில் தற்போதுதான் இதன் சாகுபடி பரப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாகச் சாகுபடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள எரியோடு கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் நன்னாரி சாகுபடி செய்து வருகிறார்.
தனது வயலில் விவசாயப் பணியில் இருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். ”எங்க சொந்த ஊரு மூலனூர் பக்கத்துல இருக்க கம்பிளியம்பட்டி. 38 வருஷத்துக்கு முன்னாடியே அப்பா ஆந்திரா போய் செட்டில் ஆகிட்டாரு. அங்க நன்னாரி, மா, கொய்யா, பப்பாளி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்ளோட இலைதழைகளை வாங்கி வட மாநிலங்களுக்கு அனுப்பிட்டு இருக்காரு. நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். நான் இப்ப விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே நன்னாரி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டல் தொழிற்சாலை அமைக்குற எண்ணத்துல இருக்கேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், நன்னாரியை விவசாயம் செய்வது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஒரு கிலோ விதை 25,000 ரூபாய்
“இன்னிய தேதிக்கு நன்னாரி கிழங்குக்கு நல்ல வரவேற்பு இருக்கு. சந்தையில இதுக்கான தேவையும் அதிகமா இருக்கு. ஒரு காலத்துல காட்டுப் பகுதியிலிருந்து நன்னாரி கிழங்கைச் சேகரிச்சு விற்பனைக்கு அனுப்பிட்டு இருந்தாங்க. பொன் முட்டையிடுற வாத்தை அறுத்து பாக்குற மாதிரி பேராசையில வேரோட வெட்டி எடுத்ததுல ஒரு கட்டத்துல நன்னாரி அருகிப்போச்சு. முன்ன மாதிரி காடுகள்ல கிடைக்கல. தேடித் தேடி எடுக்க வேண்டியிருந்துச்சு. அந்தக் காலகட்டத்துல ஆந்திராவுல நன்னாரியை விவசாயமா பண்ண ஆரம்பிச்சாங்க. நான் ஒரு கட்டத்துல நன்னாரி விதை எடுத்துப் போட்டுப் பார்க்கலாம். வந்தா நடுவோம். இல்லைன்னா ஆந்திராவுல இருந்து நாத்து வாங்கி வந்து நடவு பண்ணி விவசாயம் பண்ணலாம்னு நினைச்சு 10வருஷத்துக்கு முன்னாடி காட்டுல போய் ஒரு கைப்பிடி விதை சேகரிச்சு கொண்டு வந்தோம். அதை நாத்து போட்டோம். நல்லா வந்துச்சு. பிறகு தனி வெள்ளாமையா வைக்கலாம்னு முடிவு பண்ணி 50 கிலோ அளவுக்கு விதையை வாங்குனோம். அன்னிக்கு நிலைமையில ஒரு கிலோ விதையோட விலை 32,000 ரூபாய். நாங்க நன்னாரி விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, இதுல நிறைய பேர் வந்தாங்க. விதைக்குக் கடுமையான தட்டுப்பாடு உருவாகிடுச்சு. ஒரு கிலோ விதை 50,000 ரூபாய் விலைக்குப் போயிடுச்சு. இப்ப ஒரு கிலோ விதை 25,000 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதைக் காட்டுல தான் எடுக்க முடியும்” என்றவர் நன்னாரி பயன்பாடு குறித்துப் பேசினார்.
ஏக்கருக்கு 15,000 நாற்றுகள்
“ஒரு கிலோ விதை போட்டா 25,000 நாற்றுகள் வரும். ஒரு ஏக்கருக்கு 15,000 முதல் 20,000 நாற்றுகள் வரைக்கும் நடலாம். 3 வருஷத்துக்கு மண்ணுக்குள்ளயே விடணும். அதுக்குப் பிறகு தான் அறுவடை செய்ய முடியும். இதோட பச்சை கிழங்கு ஊறுகாய் தயாரிக்க பயன்படுது. காய்ஞ்ச கிழங்கு டீத்தூள் பொடியில நிற மாற்றத்துக்காகப் பயன்படுத்துறாங்க. அதோட டயாலிஸ் ஊசியில மருந்தாவும் பயன்படுது. ஜெலூசில் மாதிரியான டானிக் தயாரிப்புலயும் பயன்படுது. நன்னாரி சர்பத்துக்கு இதோட எசென்ஸ் பயன்படுது. சில உணவுப்பொருள்கள்லயும் சேர்க்கப்படுது” என்றவர் நிறைவாக வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
20 டன் கிழங்கு
“ஒரு ஏக்கர்ல சுமார் 15,000 நாற்று நடவு பண்ணுனா 3 வருஷம் கழிச்சு 20 டன் பச்சை கிழங்கு கிடைக்கும். இன்னிய தேதிக்கு ஒரு டன் பச்சை கிழங்கு விலை 75,000 ரூபாய். அந்த வகையில 20 டன்னுக்கு 15,00,000 ரூபாய் கிடைக்கும். இதுல செலவு 2,50,000 ரூபாய் போனாலும் 12,50,000 ரூபாய் லாபமா நிக்கும். அதே கிழங்கைக் காய வெச்சுக் கொடுத்தா ஒரு கிலோ 350 ரூபாய். 5 கிலோ பச்சை கிழங்கைக் காய வெச்சா ஒரு கிலோ காய்ஞ்ச கிழங்கு கிடைக்கும். 20 டன் பச்சை கிழங்கைக் காய வெச்சா 4 டன் காய்ஞ்ச கிழங்கு கிடைக்கும். அதை விற்பனை பண்றது மூலமா 14,00,000 ரூபாய் கிடைக்கும். அதுல செலவுத்தொகை 2,50,000 ரூபாய் போனாலும் 11,50,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.
நன்னாரி சாகுபடி
கரிசல் மண்ணைத் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். இது கொடி வகை பயிர். நிலத்தை நன்றாக உழவு செய்து 2 அடி அகல பாத்திகளை நீளமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். அதன் மீது சொட்டு நீர் பாசன குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு அடி இடைவெளியில் ‘ஜிக் ஜாக்’ முறையில் பாத்திகளின் இரண்டு கரைகளிலும் விதைகளை நடவு செய்ய வேண்டும். இது நிலத்துக்கு அடியில் விளையும் கிழங்கு வகை பயிர் என்பதால் பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்க பாத்தியில் குப்பை எரு போடக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு எந்த அடியுரமும் தேவையில்லை. நடவு செய்தபிறகு 40 நாட்களுக்கு ஒருமுறை 60 லிட்டர் டேங்கில் ஒன்றரை லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீருடன் பாய்ச்சலாம். மழை அதிகமாக இருந்தால் 110 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ ‘புளூ காப்பர்’ கலந்து பாசன நீருடன் கலந்து விடலாம்.அவ்வப்போது பஞ்சகவ்யா கொடுக்கலாம். இதனை இயற்கை வழி வேளாண்மையில் சாகுபடி செய்தால் தான் விற்பனை செய்ய முடியும். சின்ன ஜேசிபி மூலம் இதற்காகத் தயாரிக்கப்பட்ட கம்பி மூலமாக அறுவடை செய்யலாம். ஒரு செடியில் இருந்து ஒன்றரை கிலோ முதல் 4 கிலோ கிழங்குகள் கிடைக்கும்.
விதை மற்றும் விற்பனை
நன்னாரி விதை மற்றும் நாற்று பற்றிப் பேசிய கிஷோர், ” நன்னாரி சாகுபடி அருமையான விவசாயம். இன்னிய தேதிக்கு கிழங்கு வாங்கிக்குற வியாபாரிக பலபேர் தமிழ்நாட்டுலயே உருவாகிட்டாங்க. எங்க அப்பா ஆந்திராவுல இதை வாங்கி விற்பனை செய்றதால அவர் மூலமாகவே நான் விற்பனை பண்ணிடுறேன். தமிழ்நாட்டுல இருக்க சில விவசாயிக கிட்டயும் நானே வாங்கி, ஆந்திராவுக்கு அனுப்பிட்டு இருக்கேன். நான் நன்னாரி சாகுபடியில இறங்கி 7 வருஷம் ஆச்சு. என்னோட சாகுபடியை பார்த்துட்டு பலரும் விதை கேட்குறாங்க. ஆனா, நான் யாருக்கும் விதை கொடுக்குறதில்ல. விதையை முறையா நேர்த்தி பண்ணி விதைக்கணும். அது சரியா இல்லன்னா ஒரு சில நேரத்துல முளைக்காம போயிடும். அது விவசாயிக்கும் நஷ்டம். எனக்கும் கெட்ட பேர். அதனால இப்ப நான் நாற்றாக உற்பத்தி பண்ணி கொடுக்கிறேன். ஒரு நாத்து 5 ரூபாய். ஒரு ஏக்கருக்கு குறைஞ்சபட்சம் 15 நாற்று வேணும். நாற்றுக்கு மட்டும் 75,000 ரூபாய் ஆகிடும். நன்னாரி விவசாயத்துல இது தான் பெரிய செலவு. அதுக்குப் பிறகு பெருசா செலவு எதுவும் இருக்காது. என்கிட்ட நாற்று வாங்கி சாகுபடி செய்றவங்க என்கிட்ட தான் கிழங்கை விற்பனை செய்யணும்னு அவசியம் இல்ல. யாருக்கு வேணும்னாலும் விற்பனை செய்யலாம். விற்பனை செய்ய முடியாதவங்களுக்கு நான் விற்பனை செய்து கொடுத்திட்டு இருக்கேன். விற்பனை வாய்ப்பு பற்றி எந்த பிரச்சனையும் இல்ல. வாய்ப்பு இருக்க விவசாயிகள் நன்னாரி சாகுபடி செய்றது மூலமா 3 வருஷத்துல கணிசமான வருமானம் பார்க்கலாம். அதுக்கு நான்தான் உதாரணம்” என்றார்.
தொடர்புக்கு : கிஷோர் – 82207 65277