Online News Portal on Agriculture

கரும்பில் வெண்புழு தாக்குதல்…. தடுக்கும் வழி…

0 39

கரும்பில் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்ளுமாறு, அமராவதி சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை கிருஷ்ணாபுரம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான, திருப்பூர்  மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்துள்ள, கரும்பு பயிரில் தற்போது, வெண்புழுவின் தாக்குதல், ஆங்காங்கே காணப்படுகிறது.

மே முதல் செப்டம்பர் வரையிலான வறட்சி காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். தோகைகள் மஞ்சள் நிறமடைந்து, வாடிச் சருகு போல் மாறிவிடும். உச்சிக்குருத்தின் பகுதி முழுவதும் காய்ந்து விடுவதோடு, பாதிக்கப்பட்ட  கரும்பின் தூரினை இழுத்தால், எளிதில் மேலே வந்துவிடும். வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் காணப்படுவதே, வெண்புழு தாக்குதல் அறிகுறியாகும்.

கரும்பு நடவு செய்யும்போது வேப்பம் பிண்ணாக்கு இட்டிருந்தால், இந்நோய் தாக்குதல் இருக்காது. கோடைக்காலங்களில் அறுவடை முடிந்தவுடன், ஆழமான உழவு செய்வதோடு, வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு பராமரித்தால், வெண்புழு நிலத்திலிருந்து  வெளியே வந்துவிடும். பயிர் சுழற்சி முறைகளைக் கடைபிடித்தும், வெண்புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.  ஒரு ஏக்கருக்கு, மெட்டாரைசியம், அனிசோபிலியே மற்றும் பிவேரியா பேசியானா ஆகிய உயிரியல் பூஞ்சான் கொல்லிகளை தலா, 5 கிலோ வீதம், 100 கிலோ மட்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து 10 நாட்கள் வைத்திருந்தபின், பாதிக்கப்பட்ட இடங்களில் தூவி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு குருத்துக்கு, 2 முதல் 5 புழுவரை பாதிப்பு தென்பட்டால், ஊடுருவிப் பாயும் ரசாயன பூச்சிக் கொல்லிகளான குளோர்பைரிபால் ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில், 200 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில்  இட்டு, நீர் பாய்ச்ச வேண்டும். அல்லது குளோர்பைரிபால், 2 மில்லி அல்லது பீட்ரோனில் 2 மில்லி , ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்று கட்டுப்படுத்தலாம். இத்தாக்குதலை அனைத்து விவசாயிகளும் கூட்டு முயற்சியாக ஒரே சமயத்தில், நோய் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தால், வெண்புழுவின் தாக்குதலை முழுவதும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.