உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி, கரும்பாக்கம், பினாயூர், அரும்பலியூர் உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. இப்பகுதிகளில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடவு செய்த கரும்பு பயிர்கள் தற்போது பாதி வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், இப்பகுதி கரும்பு தோட்டங்களில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் புகுந்து நாசம் செய்வதால், கரும்புகள் உடைபட்டு சேதமாகின்றன. இதனால், தோட்டத்தில் உள்ள கரும்புகளை பாதுகாக்க விவசாயிகள் புதுமையான வழிகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி, குருமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், தோட்டத்தில் உள்ள ஐந்தாறு கரும்புகள் வீதம் ஒன்றாக சேர்த்து கட்டி தோட்டத்தில் இடைவெளி ஏற்படுத்தி உள்ளனர். இதனால், தோட்டத்திற்குள் புகுந்து செல்லும் காட்டு பன்றிகளால், கரும்புகள் சேதமாகாமல் பாதுகாப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.