கற்றாழை செடிக்குள் இருக்கும் பசை பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. தோல் மற்றும் முடிக்குப் பயன்படும் அழகு சாதனப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. ஆனால், கற்றாழையில் மேல் தோல் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகிறது.
அமேரிக்காவின் டெக்சாஸ் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தோலில் இருந்து சுற்றுச்சூழலை மாசு படுத்தாத விஷம் இல்லாத பூச்சிக்கொல்லியை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பிற செடிகளின் இலைகளையும் தண்டுகளையும் மொய்க்கும் பூச்சிகள், வண்டுகள் ஆகியவை கற்றாழை அருகே வராததை விஞ்ஞானிகள் கண்டனர். உடனே கற்றாழையின் மேல் தோலை ஆய்வுக்கூடத்திற்குக் கொண்டு வந்து ஆய்வு செய்தனர். சாதாரண அறை வெப்பநிலையில் காற்றை மட்டும் செலுத்தி அந்தத் தோலை காய் வைத்தனர். பின்னர் அதிலிருந்து ‘டைக்ளோரோ மீத்தேன்’, ‘ஹெக்ஸேன்’ ஆகியவற்றைப் பிரித்தெடுத்தனர். இவை இரண்டும் விஷத்தன்மை மிக்கவை.
இவற்றை விட்டுவிட்டு ஆக்டாகோசனால், கபெனாய்டின் பி, டைனோடெர்ப், அர்ஜூன் ஜெனின், நோனாடெக்னோன், குயில்லய்க் ஆசிட் ஆகிய விஷமற்ற வேதியல் கலவைகளை எடுத்தனர். இவற்றை வயல்களில் பயன்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதில் வெற்றி கண்டால் இவற்றைக் கொசுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும். தற்சமயம் விவசாயத்திற்குப் பயன்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதர்களுக்கும் மண்ணுக்கும் பிற உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை இயற்கை பூச்சிக்கொல்லிகள் வாயிலாகச் சரி செய்ய முடிந்தால் அது அனைவருக்கும் நன்மை தரும்.