கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வெப்ப மண்டல பகுதிகளில் வளரக்கூடிய சிப்பி காளான் ரகம் உருவாகப்பட்டுள்ளது. இந்த ரகமானத, மகசூல் அதிகமாகவும், உற்பத்தி சுழற்சி நாட்கள் குறைவாகவும் இருக்கும். எதிர்வரும் கல்வியாண்டில், புதிய ரக சிப்பி காளான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பல்கலை காளான் அபிவிருத்தி மையம் சார்பில், மருத்துவ குணங்களை கொண்ட 10 புதிய ரகங்கள் ஒரு சில ஆண்டுகளில் வெளியிடுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
தற்போது நாம் உணவுக்காக பயன்படுத்தும் காளான்களில், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அதனை குறைத்து, சுவையை கூட்டியும், மகசூலை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு காளான் ரகங்களில் உள்ள மருத்துவ தன்மைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய காளான் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி திருவோணமாலா, ” உணவுக்காளான்களை சாகுபடி செய்யும் விவசாயிகளே, மருத்துவ காளான்களையும் சாகுபடி செய்ய பல்கலை தரப்பில் ஊக்குவிக்கவுள்ளோம். மருத்துவ காளான்களில் உள்ள மூலக்கூறுகளை பயன்படுத்தி, சர்க்கரை பாதிப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மருந்துகளை தயாரிக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, சில மருத்துவ கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. விரைவில், புதிய மருத்துவ காளான்களின் ரகங்கள் வெளியிடப்படும். தவிர, காளான்களை திறந்தவெளியில், வாழையில் ஊடுபயிராக சாகுபடி செய்யவும், பிளாஸ்டிக் டப்பாக்களில், வீடுகளின் தேவைக்கு அவரவர் மாடித்தோட்டங்களில் வளர்க்கவும், தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளோம்” என்றார்