Online News Portal on Agriculture

கொண்டைக்கடலையில் அதிக மகசூல்… வேளாண்துறை அறிவுரை…

0 51

கோவை மாவட்டத்தில் கொண்டைக்கடலை 2,500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கொண்டைக்கடலை பயறுக்கு குறைந்த அளவில் நீர் தேவைப்படுவதால் மானாவாரி மற்றும் இறவை பாசனமாக பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, சர்க்கார்சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. தற்போது, விவசாயிகளுக்கு கொண்டைக்கடலை விதை, நுண்ணூட்ட கலவை, திரவ உயிர் உரங்கள், டிரைக்கோடெர்மா விரிடி போன்ற உயிரியல் காரணிகள் மானிய விலையில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சீசன் காலம் என்பதால், கொண்டைக்கடலை சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முத்துலட்சுமி, “பயறு வகை பயிர்களில் உயர் சாகுபடி தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், இலைவழி ஊட்டச்சத்து தெளித்தல், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நடப்பு மாதம்(குளிர் காலம்) மானாவாரியாக விதைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 70.75 கிலோ விதையை விதைக்கும்போது, செடிக்குச் செடி 10 செ.மீ, பார் 30 செ.மீ இடைவெளி விட வேண்டும். நிலத்தை 3 முதல் 4 முறை புழுதிபட நன்கு உழவு செய்ய வேண்டும். விதையை ரைசோபியல் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் (ஹெக்டேருக்கு 200 கிராம்) அல்லது பாஸ்போ பாக்டீரியாவை (ஹெக்டேருக்கு 200 கிராம்) கொண்டு, அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நிலத்தை நன்கு உழுது, ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுவுரத்தை கடைசி உழவிலும், தழை, மணி, சாம்பல் சத்தினை 12.5 : 2.5 :12.5 கிலோ என்ற அளவில் இட வேண்டும். நுண்ணூட்ட கலவையை ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ என்ற அளவில் இடுவதால் மகசூல் அதிகரிக்கும். பயிர் வளர்ச்சியை பொருத்து, வளர்ச்சி பருவம் பூக்கும் தருணம், காய்க்கும் தருணம் போன்ற பருவத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ டி.ஏ.பி இருமுறை இட வேண்டும்.

ஒரு ஹெக்டேருக்கு தேவையான டி.ஏ.பி.,யை 15 லிட்டர் நீரில் முதல் நாளே கலந்து வைக்க வேண்டும். நன்கு வடிகட்டி தெளிவான கரைசலை, 625 லிட்டர் நீர் கலந்து, செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக்கூடாது.

விதைத்த 85 முதல் 90 நாட்களில் காய்கள் முற்றியபின் அறுவடை செய்யும் காய்களை உடைத்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். மாவட்டத்தில் அதிக மகசூல் தரக்கூடிய என்.இ.பி.ஜி., 3,119,47 மற்றும் 49 போன்ற ரகங்கள் பயிரிடலாம். இம்முறையில் ஹெக்டேருக்கு 1,000 முதல் 1,150 கிலோ வரை மகசூலை பெற்று குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்” என்றார்.

பூச்சி கட்டுப்பாடு அவசியம்…

அசுவிணி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சி, வெட்டுப்புழு, அரைக்காவடிப்புழு, கரையான் போன்றவற்றை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதவிகிதம், டிரை அசோபாஸ் 0.05 சதவிகிதம் அளித்தபின் இருமுறை தெளிக்கலாம். உலர் வேர் அழுகல் நோய், கழுத்துப்பட்ட அழுகல் நோய், வேர் அழுகல், வாடல் நோய் போன்ற நோயைக் கட்டுப்படுத்த மேன்கேசிப் 45 அல்லது மேடாலாக்சிஸ் என்ற பூஞ்சாண கொல்லி தெளிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.