Online News Portal on Agriculture

சூரியகாந்தி…. பறவைகள் பயம் இனி வேண்டாம்… கிளிகளை விரட்டும் எளிய தொழில்நுட்பங்கள்…

0 89

இன்றைய காலகட்டத்தில் குக்கிராமத்துக் கடைகளில் கூடக் கிடைக்கக்கூடிய சமையல் எண்ணெய் வகைகளில் முதலாமிடம் சூரியகாந்தி எண்ணெய்க்குத்தான். எண்ணெய் வித்து பயிர்களில் சூரியகாந்திக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் அதிக வருமானம் கொடுக்கக்கூடிய பயிராக இருக்கிறது சூரியகாந்தி.

ஒரு காலத்தில் இறவை, மானாவாரி நிலங்கள் எங்கும் பரவலாகக் காணப்பட்ட சூரியகாந்தி பூக்களின் மஞ்சள் புன்னகை தற்போது குறைந்து விட்டது. பறவைகளிடமிருந்து விளைச்சலைக் காப்பாற்ற முடியாமல் பல விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியையே கைவிட்டு விட்டார்கள். இந்நிலையில், சில எளிய தொழில்நுட்பங்கள்மூலம் பறவைகளை விரட்டி, நல்ல மகசூலை எடுக்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி மணிமாலா.

 

கை கொடுத்த தொழில்நுட்பங்கள்

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த மணிமாலாவை சந்தித்துப் பேசினோம். “ஒரு காலத்துல எங்க ஏரியாவுல பெரும்பாலான விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்வாங்க. ஆனா, விளைய வைச்ச பூவை நாம அறுவடை செய்றதுக்குள்ள முக்காவாசி வெள்ளாமையை முடிச்சுட்டுப் போயிடுது பறவைக. அதுக்கு பயந்துகிட்டு சூரியகாந்தி சாகுபடியைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுகிட்டாங்க. எங்களுக்கும் அந்தப் பிரச்சனை இருந்துச்சு. ஆனா, அதுக்கு ஒருசில உத்திகளைக் கையாண்டோம். வெற்றி கிடைச்சது. அதனால இப்ப எங்களுக்கு சூரியகாந்தி எளிமையான, மிக லாபகரமான சாகுபடியா மாறிடுச்சு” என பீடிகையுடன் பேச்சைத் துவங்கினார்.

“சூரியகாந்தி சாகுபடியில ஜெயிக்க விதைத்தேர்வுல கவனமா இருக்கணும். முழு கறுப்பு நிறத்துல இருக்கும் விதைகள்ல எண்ணெய் சத்து அதிகம். அதனால அதுக்கு அதிக விலை கிடைக்கிது. பழுப்பு நிறத்துல வெள்ளை கோடுகள் இருக்க விதைகள்ல எண்ணெய் சத்து குறைவு. ஆனால் மகசூல் அதிகம். பறவைகளுக்கு உணவாக இந்த ரக விதைகள் வாங்கப்படுது. ஒரு கிலோ சூரியகாந்தி விதை 1,200 ரூபாய். விதை நிறுவனத்தைப் பொறுத்து விலையில மாற்றம் இருக்கலாம். அதிக விலை கொடுத்து விதைகளை வாங்குறதால வரிசையா நடவு செய்யுறது ரொம்ப முக்கியம்.

மகசூலை கபளீகரம் செய்யும் கிளிகள்

சூரியகாந்தி பயிரில் பெரிய பிரச்சனையே அறுவடைக்கு முந்தி மகசூலைப் பாதுகாப்பது தான். பயிர் முதிர்ச்சி அடையுற சமயத்துல பறவைகள் அதிகமா வரும். குறிப்பா கிளிகள் கூட்டம் கூட்டமா வந்து, பூக்கள் மேல வாகா உட்கார்ந்து, விதைகளைக் கொத்தி எடுக்கும். மேலே இருக்க கறுப்பு ஓடு பகுதியை உரிச்சு, உள்பகுதியில இருக்க வெள்ளை நிற பருப்பைத் திங்கும். கிளிகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா மகசூலையே கபளீகரம் பண்ணிடும். காலையிலயும், சாயங்காலமும் வர்ற இந்தக் கிளி கூட்டத்தை விரட்ட வேலைக்கு ஆளுங்களை வெச்சு, சத்தம் உண்டாக்கி விரட்டலாம். இது இன்னிக்கு நிலைமையில ரொம்ப செலவு வைக்கிற விஷயமா இருக்குது.

பறவைகளை விரட்டும் பட்டாசு திரி

கிளிகளை விரட்டுறதுக்காக நான் 3 வகையான நடவடிக்கை எடுத்துட்டு வர்றேன். தென்னை நார் கயிறுல பட்டாசு திரிகளை சொருகி வெச்சு, அதோட ஒரு முனையில நெருப்பு வெச்சு, அங்கங்க கட்டி விடணும். நெருப்பு கனந்துகிட்டே போகும். திரி பகுதி வந்ததும் பட்டாசு திரி பத்திக்கிட்டு பட்டாசு வெடிக்கும். அடுத்த கயிறு கனந்து, அடுத்த பட்டாசு வெடிக்கும். இதுபோல மாறி, மாறி அதிக சத்தமா பட்டாசு வெடிச்சா பறவைகள் அந்தப் பகுதிக்கு வரவே வராது.

‘சோலார்’ பறவை விரட்டி

அடுத்தது சூரிய சக்தியில இயங்கும் பறவை விரட்டி. இது வெளியில கிடைக்குது. இதுல மேல்புறமுள்ள ‘சோலார் பேனல்’ மூலம் மின்சாரம் உண்டாகி, கீழே இருக்க ‘பேட்டரி’யில சேமிக்கப்படுது. இந்த மின்சார உதவியால உள்ளே இருக்க தானியங்கி ஒலி உண்டாக்கி, நாம முன்கூட்டியே பதிவு செஞ்சு ‘மெமரிகார்டு’ மூலமா பொருத்தியிருக்குற சத்ததை… ஒலிப்பெருக்கி மூலம் வெளியிடுது. ‘டைமர்’ உதவியால குறிப்பிட்ட நிமிஷ இடைவெளியில பலமான சத்தம் எழுப்பப்படும். அதனால அந்தப் பகுதிகளுக்குப் பறவைகள் வர்றதில்ல. இந்தக் கருவிக்குக் கூடுதலா செலவாகும்.

‘மெகாபோன்’ ஒலிப்பெருக்கி

மூன்றாவது, சிறிய வகை ‘மெகாபோன்’ ஒலிப்பெருக்கி. இது சீன தயாரிப்பு. இது மின்சாரம் அல்லது பேட்டரியால் இயங்கக்கூடியது. இதுல நாய் குரைக்குற சப்தம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். நாமளும் பலமான வெவ்வேறு சத்தங்களைப் பதிவு செஞ்சிக்கலாம். காலை, மாலை நேரங்கள்ல இதனை இயக்கினா பறவைகள் வர்றதில்லை. இதைத் தவிர காற்றுல இயங்கக்கூடிய பறவை விரட்டி இருக்கு. ஆனா, அது காற்று வீசும்போது மட்டும் தான் வேலை செய்யும். அதனால பெருசா பலன் கிடைக்காது” என்றவர் சூரியகாந்தி சாகுபடி செய்யும் முறைகள் பற்றி பகிர்ந்துகொண்டார். அது இங்கே பாடமாக…

மழைக்காலம் கவனம்

“சூரியகாந்தியை நீர் தேங்கி நிற்காத அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். இது காரத்தன்மை உள்ள நிலத்திலும், உப்பு அதிகம் உள்ள தண்ணீரிலும் நன்கு வளரும். மண்ணில் கார, அமில நிலை 6.5 முதல் 8 வரை இருக்கலாம். ஆனால் அமில நிலத்தில் விதைக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. செம்மண் நிலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், கரிசல் நிலத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் பயிர் செய்யலாம். பூக்கள் பூக்கும் தருணத்தில் மழைக்காலம் இல்லாமல் இருக்குமாறு திட்டமிட வேண்டும்.

சாகுபடி நிலத்தில் 12.5 டன் மட்கிய தொழுவுரம் போட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்து மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும். மண் பரிசோதனை செய்தால் அந்தப் பரிந்துரையின்படி ரசாயன உரம் இடலாம். இல்லை எனில் தழைச்சத்து 40, மணிச்சத்து 20, சாம்பல் சத்து 20 எனும் பரிந்துரையின்படி இட வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு யூரியா 88 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 33 கிலோ இட வேண்டும். இதில் சூப்பர் பாஸ்பேட்டும், பொட்டாஷும் அடி உரமாகவும், யூரியாவை மேலுரமாகவும் கொடுக்க வேண்டும். அத்துடன் 2 கிலோ அசோஸ்பரில்லத்தை மணலுடன் அல்லது மட்கிய தொழுவுரத்துடன் கலந்து விதைப்பதற்கு முன்பு அடியுரமாக இட வேண்டும்.

பற்றாக்குறையை சமாளிக்க…

15 கிலோ நுண்ணூட்ட கலவையைத் தேவையான அளவு மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் இடுவது அவசியம். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் கரைத்து 30,40 மற்றும் 50-ம் நாளில் தெளிக்க வேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ‘பெர்ரஸ் சல்பேட்’ ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் கரைத்து, 30,40 மற்றும் 50-ம் நாளில் தெளிக்க வேண்டும்.

தனியார் ஒட்டு ரகமாக இருந்தால் பாருக்கு பார் 45 செ.மீ. இடைவெளி, செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி கொடுத்து விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ முதல் 6 கிலோ விதை தேவைப்படும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதையை ஒரு அங்குல ஆழத்திற்கு மிகாமல் நட வேண்டும். அதிக ஆழமாக விதை நட்டால் முளைப்பதில் சிரமம் உண்டாகும். விதைத்தவுடன் முதல் தண்ணீர். 3 முதல் 4 நாட்களில் உயிர் தண்ணீர். களை வெட்டி, மண் அணைத்து, உரமிட்டு 20 நாளில் மூன்றாம் தண்ணீர், மொட்டு பிடிக்கும் சமயம், பூப்பிடிக்கும் சமயம், விதை பிடிக்கும் தருணத்தில் அவசியம் தண்ணீர் தேவை. மற்றபடி மழை, வெயில், மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றை அனுசரித்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் பாசனம் சிறந்தது.

அதிக மணிகள் பிடிக்க…

சூரியகாந்தி விரைவான வளர்ச்சியடையும் பயிர் என்பதால் விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் களைக்கொத்தி கொண்டு, களை எடுக்க வேண்டும். தாமதமனால் களை எடுப்பது சிரமமாகிவிடும். பூக்களில் அதிக மணிகள் பிடிக்க வேண்டும் என்றால் 625 லிட்டர் தண்ணீரில் ‘என் ஏ ஏ’ (நாப்தலின் அசிட்டிக் அமிலம்) 280 கிராம் சேர்த்து (இது 20 PPM அளவு) காலை வெயில் ஏறியவுடன் 10 மணி முதல் 3 மணிக்குள் தெளிக்கலாம்.

சூரியகாந்தி பயிரில் பெரியதாகப் பூச்சி, நோய் தாக்குவதில்லை. இலை உண்ணும் புழுக்கள் மற்றும் வண்டுகள் காணப்பட்டால் ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு ‘ஃபாசலோன்’ 35 EC ஒரு லிட்டர் அல்லது ‘ஃபெந்தியான்’ 100 EC ஒரு லிட்டர் தெளித்து கட்டுப்படுத்தலாம். பச்சைப்புழு மற்றும் இலை பேன்கள் காணப்பட்டால் ‘ஃபாசலோன்’ 4 D தூவலாம் அல்லது ‘ஃபாசலோன்’ 35 EC  ஒரு லிட்டர் தெளிக்கலாம்.

 

பூவழுகல்

இலைப்புள்ளி மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த ‘மான்கோசெப்’ ஒரு கிலோ தெளிக்கலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ‘கார்பன்டாசிம்’ ஒரு கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட செடிகளின் சுற்றி வேர்ப்பகுதி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும். கடுமையான மழையில் பூவழுகல் காணப்படும். இதற்கு ‘மான்கோசெப்’ பூஞ்சண கொல்லியை பூவின் பாகங்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

அறுவடை

பூவின் அடிப்பாகத்தின் இதழ்கள் மஞ்சள் நிறமாக மாறி இருப்பது பூ விளைந்ததன் அறிகுறி. பூ கொண்டையில் உள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பதும் முதிர்ச்சி அடைந்ததற்கான அறிகுறி. உலர்ந்த பூக்களைப் பறித்து நன்கு உலர்த்திய பிறகு விதைகளைத் தனியே பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். விதைகளில் 8 முதல் 9 சதவிகிதம் ஈரப்பதம் வரும்வரை நன்கு உலரவைக்க வேண்டும். அடுத்த பயிருக்குப் போதுமான கால இடைவெளி இருக்குமானால் சூரியகாந்தி பயிரினை நிலத்திலேயே செடியுடன் காயவிட்டு பிறகு அறுவடை செய்தால் பூவிலிருந்து விதைகள் எளிதாகப் பிரிந்துவிடும்” என்றவர் நிறைவாக, “நாங்க சூரியகாந்தி சாகுபடி செஞ்சு 10 வருஷமாச்சு. பறவைகளுக்கு பயந்துகிட்டுதான் விதைக்காம இருந்தோம். இந்தத் தடவை பறவைகளை விரட்ட இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 10 ஏக்கர் சாகுபடி செஞ்சிருக்கேன். இந்தத் தடவை பறவைகளால எந்தத் தொந்தரவும் இல்ல. நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். எங்க தோட்டத்துல கிளிகள் தொந்தரவு இல்லாம சூரியகாந்தி நிக்குறதைப் பார்த்துட்டு அக்கம்பக்கத்து விவசாயிகளும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சூரியகாந்தி சாகுபடியை ஆரம்பிச்சிருக்காங்க. இதுல இவ்வளவு ரூபாய் வருமானம் கிடைக்கும்னு அறுவடைக்குப் பிறகு தான் சொல்ல முடியும். ஆனா, வழக்கமா பறவைகளால பாதி மகசூல் பாழாகிடும். அது இப்ப நடக்கல. அதுவே என்னைப் பொறுத்தவரை லாபம் தான்” என்றபடி விடைகொடுத்தார்.

விதை நேர்த்தி

2 கிராம் ‘கார்பன்டிசம்’ எடுத்து ஒரு கிலோ விதையில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கலாம். ஒரு கிலோ விதையில் 4 கிராம் டிரைக்கோடெர்மா என்ற அளவிலும் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். அசோஸ்பைரில்லம் உயிர் உரத்துடன் ஆறிய கஞ்சியைச் சேர்த்து விதையுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின் நடவு செய்யலாம்.

மகசூலை அதிகமாக்கும் தேனீக்கள்

சூரியகாந்தி பூக்களில் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தினால் மட்டுமே நல்ல மகசூல் எடுக்க முடியும். காலை 9 முதல் 11 மணிக்குள் பூவின் மேல்பாகத்தை மெல்லிய பருத்தி நூல் துணியில் மெதுவாக ஒத்தி எடுத்து மகரந்தச்சேர்க்கையை அதிகப்படுத்தலாம். பூக்கள் பூக்கத் துவங்கியதுமே தேனீக்கள் வரத் துவங்கும். ஹெக்டேருக்கு 3 முதல் 5 தேனீ  பெட்டிகள் வைத்தால் மகசூல் நிச்சயம் அதிகமாகும்.

 

48 முதல் 53 சதவிகித எண்ணெய் திறன்

இந்தியாவில் முக்கியமான எண்ணெய்வித்து பயிரான சூரியகாந்தியில் 48 முதல் 53 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 

பட்டம்- மாவட்டங்கள்

ஜூன், ஜூலை (ஆடிப்பட்டம்) – கோவை. ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, கரூர், தர்மபுரி, பெரம்பலூர்.

அக்டோபர், நவம்பர் (கார்த்திகை பட்டம்)  – கடலூர், விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி.

ஏப்ரல், மே    –   கோவை, ஈரோடு, தர்மபுரி, கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர்.

டிசம்பர், ஜனவரி  –    சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி.

 

 சூரியகாந்தி ரகங்கள்

கோ1, கோ2, கோ3, கோ4, மாடர்ன்

சூரியகாந்தி வீரிய ஒட்டுரகம்

எம்.எஸ்.எப்.எச் – 1

இதுதவிர தனியார் வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன. கறுப்பு நிற விதைகள் அதிக எண்ணெய் பிழி திறனுடையது. பழுப்பு நிற, வெள்ளைக்கோடு உள்ள ரகம் எண்ணெய் அளவு குறைவு.

Leave A Reply

Your email address will not be published.