ஜி- 20 தலைவர்களின் துணைவியர்கள், உலகவங்கி, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிறப்பு ஏற்பாட்டு கூட்டம் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் அறிவியல் வளாகத்தில் சனிக்கிழமை (09-09-2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உணவுகளை சுவைத்து மகிழ்ந்ததோடு உணவின் தரம், ஊட்டச்சத்து மதிப்பை வெகுவாக பாராட்டினர்.
ஜி- 20 எனப்படும் உலகநாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களின் மாநாடு வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகளோடு புதுதில்லியில் தொடங்கியது (9 – 10 செப்டம்பர், 2023). ஜி – 20 என்பது, 19 சுதந்திர நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உள்ளடக்கிய சர்வதேச கூட்டமைப்பாகும். உலக வர்த்தகத்தில் 75 சதவிகிதம் மொத்த உலக உற்பத்தியில் 80 சதவிகிதமும் ஜி – 20 கூட்டமைப்பின் பங்களிப்பாகும். இந்த கூட்டமைப்பு உலக பொருளாதாரம், அதனை பாதிக்கக்கூடிய அம்சங்கள் குறித்து ஒருமித்த திட்டங்களை வகுத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். தற்போதைய கூட்டம் இந்தியாவின் தலைமையில் பல்வேறு கட்டங்களாக, பல துறைகளில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இந்திய வேளாண்மை வளர்ச்சி, வேளாண்மையில் வேளாண் ஆராய்ச்சியின் பங்களிப்பு, வேளாண் பொருளாதாரத்தின் நிலை, வேளாண் ஆராய்ச்சியில் உலகநாடுகள் ஒத்துழைப்பு பற்றிய காட்சிப்படுத்தல் நடைபெற்றது. இதில் வேணாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை ஒருங்கிணைந்த பண்ணைமுறை நில மேம்பாடு, அங்கக வேளாண்மை பருவநிலை மாறுபாட்டை சமாளிக்கும் வேளாண் உத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டின் மூலம் உலகளாவிய அளவில் வேளாண் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய விஷயங்கள் பற்றி ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில வளர்ந்துவரும் நாடுகள் பட்டினி, தொற்றுநோய், குறைந்த உற்பத்தி, வறட்சி, வெள்ளம் மற்றும் நிலச்சீர்கேடு முதலான பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இச்சுழலில் இதில் பங்குபெறும் நாடுகள், நிறுவனங்கள் தங்களுக்குள் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இந்திய விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.