தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்து பயன்பெறலாம். என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தெரிவித்தார். நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில், மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. மிளகு பயிர் கொடி வகையாதலால், இதை சில்வர் ஓக் மரத்தில் படர்வதற்கு உகந்ததாக உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலையில், வால்பாறை பகுதியில், 130ஹெக்டேர் பரப்பளவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணின் கார அமிலத்தன்மை, 4.5ல் இருந்து 6 வரையிலுள்ள மண்ணிலும், காற்றின் ஈரப்பதம், 60-95 சதவீதம் உள்ள இடங்களிலும், தட்ப வெப்பநிலை, 10-40 செல்சியஸ் வரை உள்ள இடங்களிலும் வளரும் இயல்புடையது.
இந்தியாவில், பல் வேறு விதமான ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து எண்ணற்ற மிளகு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, பன்னியூர்-1 ரகம், நிழலில் வறட்சியை தாங்கக்கூடியதாகவும் உள்ளது. சுபகரா என்ற ரகம் எல்லா இடங்களிலும் வளரும் இயல்புடையது. ஒரு ஏக்கரில் மிளகு நடவு செய்வதற்கு, 800-1000 வேர்விட்ட குச்சிகள் தேவைப்படுகின்றன. தென்னை மரங்களில் ஊடு பயிராக நடும்போது, 30க்கு, 30செ.மீ., நீள அகலமுள்ள குழிகள் நோண்டி, குழிக்கு, 10 கிலோ தொழூரம், 10 கிராம் டிரைக்கோடெர்மா மற்றும் பேசில்லஸ் பூஞ்சானை கொல்லிகளை கலந்து இட வேண்டும்.
தென்னையில் நடவு செய்யும் போது, மரத்தின் அடியில் இருந்து, 50 செ.மீ தள்ளி குழி எடுத்து மிளகு கன்றுகள் நடவு செய்ய வேண்டும். மிளகு செடிகளில் மகரந்தச்சேர்க்கையானது தண்ணீர் வாயிலாக நடைபெறுவதால், மிளகு பூத்த 40வது நாளில் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். மிளகு தாக்கும் பூச்சிகள், பொல்லுவண்டுகள் மற்றும் பேன்களை கட்டுப்டுத்த, டைபீதோயேட் 2 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
வாடல் நோயினை கட்டுப்படுத்த, 0.25 சதவீதம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலவை பயன்படுத்தலாம். பூக்கும் காலத்தில் இருந்து, அறுவடைக்கு 6 முதல் 8 மாதங்கள் வரை எடுத்துக்கொள்கிறது. அறுவடை செய்த பழங்களை, 7 முதல் 10 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்க வேண்டும். ஹெக்டேருக்கு, 1200-ல் இருந்து 2800 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.