Online News Portal on Agriculture

தென்னை… போரான் பற்றாக்குறை… பிரச்சனையும் தீர்வும்…

-ம. சுருளிராஜன், இரா. அருண்குமார், இரா. பாபு - தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்.

0 42

தென்னை மரத்தில் குருத்து இலைகள் விரியாமலும். கொண்டை, மற்றும் தண்டுப்பகுதி வளைந்தும் காணப்படும். இம்மாதிரியான அறிகுறிகள் பூச்சிகளினாலோ அல்லது நோய்களின் தாக்குதலினாலோ உண்டாக்குவதில்லை. போரான் என்ற நுண்ணாட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படுகின்றது. எனவே, தென்னை விவசாயிகள் தங்களது தோப்புகளில் ஏற்படும் அறிகுறிகளை கண்டறிந்து கீழ்க்காணும் போரான் சத்து பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் நிவர்த்தி முறைகளை கடைபிடிப்பது அவசியமாகும்.

போரான் சத்தின் முக்கியத்துவம்

போரான் என்ற நுண்ணூட்டச்சத்து தென்னை மரத்திற்கு எவ்வகையில் உதவுகிறது என்றால் தென்னையில் சர்க்கரைப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்து செல்வதற்கும், தென்னையில் சாறு ஓட்டத்திற்கும், தழைச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் பயிரில் சேமிக்கப்படுவதற்கும் சுண்ணாம்புச்சத்து பயிருக்கு கிடைக்கச் செய்யவும் உதவுகின்றது. இது மட்டுமல்லாமல் மரத்தின் திசு வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும், மகரந்தம் முளைப்பதற்கும், தேங்காயில் பருப்பு உண்டாகவும், பருப்பின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது.

இலையின் உலர் எடையில் 10 பிபிஎன் அளவிற்கும் கீழ் போரான் சத்து குறையும்போது இதனின் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றும்.

தென்னையில் போரான் சத்துக்குறைபாட்டின் அறிகுறிகள்

சுமார் மூன்று வயதுடைய மரங்களில் சாதாரண முறையில் இலைகள் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு வெளிவர இயலாதவாறு காணப்படும். இலைகள் நீளமாக வளர்வது தடைபட்டு, இலைகளின் நுனி மடங்கி மற்றும் இலைகளானது ஏணிப்படி போன்று தோற்றமளிக்கும். மேலும், வளர்ந்த மரங்களில் இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகலானது குருத்து பாகத்திலிருந்து வளைந்து காணப்படும். குறைபாடு முற்றிய நிலையில், குரும்பைகளும், இளங்காய்களும் உதிர்வதுண்டு. அதாவது, தேங்காய்கள் முதிர்ச்சி அடைவதற்க்கு முன்பு கீழே விழுந்துவிடும். போரான் சத்துடன் சாம்பல் சத்தும் சேர்ந்து குறைவுற்றால் ஒல்லிக்காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேங்காயில் சிரட்டை இருக்காது அல்லது பருப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் பருப்பின் தரம் குறைந்து பூசணங்களால் பாதிப்படைந்து இருக்கும்.

நிவர்த்தி முறைகள்

போராக்ஸ் என்ற நுண்ணூட்டச்சத்தை ஆண்டொன்றிற்கு இளங்கன்றுகளுக்கு 50 கிராம் மற்றும் பெரிய மரங்களுக்கு 200 கிராம் என்ற அளவில் அதிக பொட்டாஷ் உரத்துடன் ( 3.5 கிலோ/ மரம்/ வருடம்) இரண்டு முறை தொடர்ந்து 3 மாதம் இடைவெளியில் மண்ணில் இடுவதால் கொண்டை வளைதல் ஏற்படாமல் ஓலைகள் நன்றாக விரிந்து வளர்ச்சியடையும். மேலும், 25 பிபிஎம் அதாவது 25 மி.லி. போராக்ஸ் 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து, வேரின் மூலம் உட்செலுத்தும்போது மரம் போரான் குறைபாட்டிலிருந்து உடனடியாக விடுபட்டுவிடும். மண்ணில் போராக்ஸ் நுண்ணூட்டத்தைத் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு இடுவதால் மரத்திற்கு நீண்டகால பலனை அளித்து, ஒல்லிக்காய்களை கணிசமாக குறைக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கும் தென்னை டானிக் 40 மி.லி. மருந்தை 160 மி.லி. தண்ணீரில் கலந்து வருடத்திற்கு இரண்டு தடவையாக ஆறு மாதங்களூக்கு ஒரு முறை வேரின் மூலம் உட்செலுத்துவதன் மூலம் இப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம் அல்லது மண்ணில் தென்னைக்கான நுண்ணூட்டக் கலவையை ஆண்டொன்றுக்கு ஒரு கிலோ வீதம் இடலாம்.

இந்த நிவர்த்தி முறைகளை கடைபிடித்து தென்னையில் போரான் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினை குறைத்து தென்னையின் உற்பத்தித் திறனை பெருக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.