தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல பகுதியிலுள்ள தென்னை மரங்களில், ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன், தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதல் உள்ளது. ‘கொனோடர்மா லூசிடம்’ என்ற பூஞ்சாணத்தால் இந்நோய் ஏற்படுகிறது. நோய் பாதித்த மரங்களில், அடித்தண்டிலிருந்து, 3 அடி உயரம் வரை சாறு வடியும். ஓலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி, மட்டைகள் காய்ந்து தொங்கும். குரும்பை, இளங்காய்களும் உதிர்ந்து, மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். மரமும் விரைவில் இறந்துவிடும்.
நோய்த்தாக்குதலுக்கு, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை வாயிலாக கட்டுப்படுத்தலாம். உழவியல் முறையாக, அதிகளவு பாதிக்கப்பட்ட மரங்களை வேருடன் பிடுங்கி, அப்புறப்படுத்த வேண்டும்.
உர மேலாண்மை
மரத்தைச் சுற்றி, தக்கைப்பூண்டு, தட்டைப்பயறு, சணப்பு ஆகியவற்றை பயிரிட்டு, பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்ய வேண்டும். 50 கிலோ தொழுஉரம், 5 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ் உரங்களை ஒரு மரத்திற்கு, சரி பாதியாக பிரித்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை இட வேண்டும். மேலும், ஒரு மரத்திற்கு, நுண்ணுயிர் உரங்களான, 100 கிராம் டிரைக்கோடெர்மா ஏஸ்பரெல்லம், 100 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் அசோஸ்பைரில்லம், 50 கிராம் வேர் உட்பூஞ்சாணம் ஆகியவற்றை 5 கிலோ மட்கிய தொழுஉரத்துடன் கலந்டு, ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும்.
வேதியியல் முறை
ஒரு சதவிகிதம் போர்டோ கலவை, மரத்தைச் சுற்றி, 2 மீட்டர் வட்டப்பாத்தியில் 15 நாள் இடைவெளியில் மண் நன்கு நனையும் வகையில் ஊற்ற வேண்டும். நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தினால், போர்டோ கலவை பயன்படுத்தக்கூடாது.
வேர் வாயிலாக, 2 மில்லி ஹைக்சகோனோலால் மருந்தை, 100 மில்லி நீருடன் கலந்து செலுத்த வேண்டும். இதனை, 3 மாத இடைவெளியில் செய்ய வேண்டும். ஒரு சில மரங்களில், மேற்பகுதி குறுகி பென்சில் முனை போல் மாறியும், அடிமட்டைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி நுண்ணூட்டச்சத்து குறைபாடுடன் காணப்பட்டது. இரும்பு, போரான், துத்தநாகம் பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து
இதற்கு, மண் பரிசோதனை அடிப்படையில், ரசாயன உரங்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, தொழுஉரம், பசுந்தாள் உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும். அதோடு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, தென்னை நுண்ணூட்ட உரம் அரை கிலோ இட வேண்டும். தென்னை டானிக் வேர் வாயிலாக செலுத்த வேண்டும்.