கரிசல் மண்ணைத் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். இது கொடி வகை பயிர். நிலத்தை நன்றாக உழவு செய்து 2 அடி அகல பாத்திகளை நீளமாக அமைத்துக்கொள்ள வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளத்தை முடிவு செய்துகொள்ளலாம். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். அதன் மீது சொட்டு நீர் பாசன குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு அடி இடைவெளியில் ‘ஜிக் ஜாக்’ முறையில் பாத்திகளின் இரண்டு கரைகளிலும் விதைகளை நடவு செய்ய வேண்டும். இது நிலத்துக்கு அடியில் விளையும் கிழங்கு வகை பயிர் என்பதால் பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்க பாத்தியில் குப்பை எரு போடக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு எந்த அடியுரமும் தேவையில்லை. நடவு செய்தபிறகு 40 நாட்களுக்கு ஒருமுறை 60 லிட்டர் டேங்கில் ஒன்றரை லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீருடன் பாய்ச்சலாம். மழை அதிகமாக இருந்தால் 110 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ ‘புளூ காப்பர்’ கலந்து பாசன நீருடன் கலந்து விடலாம். அவ்வப்போது பஞ்சகவ்யா கொடுக்கலாம்.
இதனை இயற்கை வழி வேளாண்மையில் சாகுபடி செய்தால் தான் விற்பனை செய்ய முடியும். சின்ன ஜேசிபி மூலம் இதற்காகத் தயாரிக்கப்பட்ட கம்பி மூலமாக அறுவடை செய்யலாம். ஒரு செடியில் இருந்து ஒன்றரை கிலோ முதல் 4 கிலோ கிழங்குகள் கிடைக்கும்.