நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை
டிசம்பர் 15 , 2024
கட்டுரையாளர் : முனைவர் எஸ். நித்திலா,
இணை பேராசிரியர் (பயிர் வினையியல்), மகளீர் தோட்டக்கலை கல்லூரி , திருச்சி
எண்ணெய் வித்துப்பயிர்களில் முதன்மை பயிர் நிலக்கடலையாகும். இப்பயிர் அதிகளவில் வணிக ரீதீயாக எண்ணெய் உற்பத்திக்காகவும், நேரடி உணவிற்காகவும் பயரிடப்படுகிறது. இந்திய உணவு வகைகளில் இதன் பங்கு இன்றியமையாதது. இதற்கு காரணம் இவற்றில் நிறைந்துள்ள பாஸ்பரஸ், வைட்டமின், புரதச்சத்துக்கள் ஆகும். பொதுவாக 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக புன்செய் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சுமார் 3.8 லட்சம் எக்டேர் பரப்பளவில் மானாவாரியாகவும், இறவையாகவும் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
பேரூட்டச்சத்து மேலாண்மை : ஒவ்வொரு பயிர் சாகுபடி செய்யும் முன்பும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது மண் மாதரி எடுத்து ஆய்வு செய்து உரமிடுதல் வேண்டும் அல்லது பொதுப்பரிந்துரைப்படி ஒரு ஏக்கருக்கு 15 கிலோ யூரியா, 85 கிலோ சூப்பர் பாஸ்பேட், 35 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை இறவைக்கும், 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், மற்றும் 30 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் மானாவாரிப்பயிருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் மானாவாரிப்பயிராயின் முழு உரங்களையும் அடியுரமாகவும், இறவைப்பயிராயின் சூப்பர் மற்றும் பொட்டாஷ் முழுவதும் ½ பங்கு தழைச்சத்தையும் அடியுரமாகவும் இடவேண்டும். மீதமுள்ள தழைச்சத்தை மேலுரமாகவும் இடவேண்டும்.
நுண்ணூட்ட கலவை இடுதல்: பொதுவாக தொடர்ந்து பல்வேறு பயிர்களை பயிரிடுவதால் நுண்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே பல்வேறு நுண்சத்துக்களை உள்ளடக்கிய நிலக்கடலைக்கான நுண்சத்து கலவையை பயிர்விதைப்பு செய்து நீர் பாய்ச்சும் முன் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் 15 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். பேரான் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 4 கிலோ பேராக்ஸ் மற்றும் ஜிப்சம் 160 கிலோ என்ற அளவில் விதைப்பு செய்த 45 ஆம் நாள் இடவேண்டும். கால்சியம் சத்து பற்றாக்குறை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு அடியுரமாக ஜிப்சம் 80 கிலோவும் 45 ஆம் நாள் 80 கிலோவும் இடவேண்டும்.
இலைவழி தெளித்தல்: நிலக்கடலையில் காய் நிரம்பும் பிரச்சினை பருமன் அதிகமாக உள்ள நிலக்கடலை இரகங்களில் வரும். இந்தப் பிரச்சினையைப் போக்க டி.ஏ.பி. 2.5 கிலோ மற்றும் அமோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் 500 கிராம் உரத்தை 37 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து பின்பு இந்த கரைசலை வடிகட்டி 466 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்டர் நிலத்திற்கு தெளிக்கலாம். இத்துடன் பிளானோபிக்ஸ் 350 மில்லி கலந்து விதைப்பு செய்ததிலிருந்து 25 வது மற்றும் 35 வது நாட்களில் தெளிக்கவும் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலக்கடலை ரிச் என்ற நுண்சத்து கலவையை ஏக்கருக்கு 2.25 கிலோ வீதம் 30 மற்றும் 45 ஆம் நாள் தெளிப்பதன் மூலம் பூ மற்றும் காய் பிடிக்கும் திறன் அதிகப்படுத்தலாம்.
ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் : நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச்சத்தும், கந்தகச்சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச்சத்து காய்கள் திரட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி 4 செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45 ஆம் நாள் இட்டு கொத்தி செடிகளைச் சுற்றி மண் அணைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் நிலக்கடலையின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.