Online News Portal on Agriculture

நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் மூலிகை மசால் உருண்டைகள்…!

- டாக்டர் கே.வி. கோவிந்தராஜ்

0 50

இந்தியா ஓர் விவசாய நாடு. விவசாயத்திற்கு அடிப்படைத் தேவை கால்நடைகள். அந்தக் கால்நடைகள் நலமுடன் ஆரோக்கியமாக இருந்தால்தான் விவசாயம் செழிப்படையும். கன்றுகள், பால், பாலின் உபபொருட்கள், சாணம், சிறுநீர் அதிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் மற்றும் இயற்கை விவசாயத்திற்குத் தேவையான பயிர் ஊக்கிகள், இயற்கை பூச்சி விரட்டிகள் அனைத்தும் வழங்கி, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன கால்நடைகள்.

சரிவிகித உணவு

மனித ஆரோக்கியத்தில் நாட்டின பசுக்களும் இதர கால்நடைகளும் சிறப்பாகப் பணியாற்றி, தனி மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவுகின்றன. அப்படிப்பட்ட கால்நடைகளுக்கு அடர், உலர், பசுந்தீவனம் மற்றும் போதுமான தண்ணீர் கொடுத்து பராமரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

அதேபோல கால்நடைகளுக்குத் தொற்றுநோய் தாக்காத வகையில் நோய் எதிர்ப்பாற்றல் அதன் ரத்தத்தில் உருவாக வேண்டும். நோய் எதிர்ப்பாற்றல் உருவாக தனி கவனம் செலுத்த வேண்டும். நோய்த்தாக்குதல் ஏற்படும்போது நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும் தீவனங்களையும் மூலிகைகளையும் கொடுத்து வளர்க்க வேண்டும்.

 

செலவு குறைந்த வைத்தியம்

நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும் கால்நடைகளை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் ஏதும் செய்ய முடியாது. அதிக செலவின்றி கிராமத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டும் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மசாலா உருண்டைகளைத் தயாரிக்கலாம்.

அப்படிப்பட்ட மூலிகைகளைப் பற்றியும் சமையலறை சாமான்கள் பற்றியும் தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம். இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் தொற்றுநோய்க் கிருமிகள் அழிந்து போகும். லேசான காய்ச்சல் மட்டுமே வந்து வைரஸ்கள் அழிந்துபோகும். எந்த நோயும் தாக்காது.

சுக்கு, மிளகு, சீரகம், திப்பிலி, பூண்டு, மிளகாய் வற்றல், கிராம்பு, ஜாதிக்காய், கடுக்காய், வெந்தயம், இஞ்சி, ஓமம், கல் உப்பு, பெருங்காயம், சின்ன வெங்காயம், ஏலக்காய், தேங்காய், பனைவெல்லம் போன்ற சமையலறை பொருட்களை எடுத்து ‘மிக்ஸி’யில் போட்டு ரொம்பவும் பொடியாக்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அறுகம்புல், ஆவாரம் பூ, வெள்ளை மற்றும் மஞ்சள் கரிசாலை, சோற்றுக் கற்றாழை, வாழைப்பூ, வெற்றிலை, வல்லாரை, துளசி, பிரண்டை ஆகிய மூலிகைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ‘மிக்ஸி’யில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மூலிகை உருண்டைகள்

மேற்கண்ட மூலிகைகளைத் தவிர, மாவிலை, ஆடாதோடை, ஓரிதழ் தாமரை, செம்பருத்தி பூ, முடக்கற்றான், நிலவேம்பு, சிறுகுறிஞ்சான், மொசுமொசுக்கை, புதினா, வேலிப்பருத்தி, அப்பக்கோவை, தூதுவளை, தொட்டாற்சுருங்கி, மருதாணி போன்ற மூலிகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் கீரை வகைகள் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தும் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு இந்த உருண்டைகளைத் தயாரிக்கலாம்.

 

மூலிகைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கல்லில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் அத்துடன் முதலில் இடித்து வைத்த சமையலறைச் சாமான்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கலக்கி ஆப்பிள் பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

உருட்டி வைத்த உருண்டைகளை மஞ்சள் தூளில் நன்றாகப் பிரட்டி, காலை வேளையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் ஊட்டிவிட வேண்டும். பிறகு மாதம் ஒரு முறை, மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும். இப்படிக் கொடுக்கும்போது அதன் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகிவிடும்.

இந்த மூலிகை மசால் உருண்டைகளை நோய்த் தாக்குதலுள்ள பொழுதும், வயிற்றுப்போக்கு இருக்கும் பொழுதும், காய்ச்சல் இருந்தாலும் கொடுக்கலாம். செலவுக் கணக்கு பார்த்தால் ஒரு உருண்டை தயாரிக்க 25 முதல் 30 ரூபாய் ஆகலாம். குறைவான செலவிலேயே நோய் எதிர்ப்பாற்றலை கால்நடைகளின் ரத்தத்தில் உருவாகச் செய்யலாம். நோய் வந்தபிறகு செலவு செய்யும் தொகையில் இது ஒரு சிறு துளி தான்.

மூலிகை மசால் உருண்டைகளில் இருக்கும் சோற்றுக்கற்றாழை, பிரண்டை, வேலிப்பருத்தி போன்றவை, வயிற்றினுள் இருக்கும் குடற்புழுக்களை அழிக்கும். அத்துடன் கால்நடைகளுக்குக் கொடுக்கும் அடர், உலர், பசுந்தீவனங்களில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் கால்நடைகளின் உடலைத் தேற்றி, ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கின்றன.

தயார் செய்த மூலிகை மசால் உருண்டைகளை மஞ்சள் தூளில் பிரட்டி வைப்பதால் ஒரு வாரம்வரை வைத்துப் பயன்படுத்தலாம். அதன்பிறகு பூஞ்சக்காளான் மாதிரி படர்ந்து விடும். அப்படிப் பூஞ்சக்காளான் உருவானால் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூஞ்சக்காளானுடன் உட்கொள்ளும்போது விஷத்தன்மை உருவாகி வயிற்றுப்போக்கு ஏற்படும்.

உடலுக்கு வலுசேர்க்கும் வைட்டமின் ‘D’

கால்நடைகளுக்கு வைட்டமின் ‘D’ தேவை. அதற்கு, காலை வெய்யிலில் நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் கால்நடைகளை மேய விடலாம். சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் ‘D’ யை கிரகித்துக் கொள்ளும். வைட்டமின் ‘D’ தான் உணவுப் பொருட்களில் உள்ள கால்சியத்தை கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றி உடலுக்கு வலு சேர்க்கிறது. தீவனங்களில் பல்வேறு விதமான சத்துக்கள் இருப்பது போல மாற்றி மாற்றி கொடுத்துப் பழக்கினால், கால்நடைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

போதுமான அளவு சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் பாத்திரத்தைச் சுத்தமாகத் தினமும் கழுவி விட வேண்டும். தொட்டியில் உள்ள தண்ணீரைப் பருக அனுமதிக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைக் காலி செய்து விட்டு சுண்ணாம்பு பூசி வைக்க வேண்டும்.

தீவன அளவு

வளர்ந்த கால்நடைகளுக்கு அதனுடைய உடல் எடை, வயதுக்கு ஏற்ப சராசரியாக 20 முதல் 30 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். கலப்புத் தீவனம் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. அதில் கோதுமை, அரிசித் தவிடு, உளுத்தம் பொட்டு, கடலைப்பொட்டு, துவரம் பொட்டு, மக்காச்சோள மாவு, சமையல் உப்பு, தாது உப்புக்கள் கலந்த கலவையைக் கால்நடைகளின் வயதிற்கும், கொடுக்கும் பால் அளவுக்கும் ஏற்றாற்போல ஒரு கிலோவிலிருந்து 5 கிலோ வரை அடர்தீவனம் தேவைப்படும். உலர் தீவனங்களைப் பொறுத்தவரை 2 முதல் 10 கிலோ வரை கொடுக்க வேண்டும்.

சோளத்தட்டு NB21, COFS 29,30,31, முருங்கை, அகத்தி, வேலிமசால், கினியாபுல், கம்பு நேப்பியர் புல், கொழுக்கட்டைப் புல் இன்னும் பல்வேறு பசுந்தீவனங்களைத் தினம் தினம் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். வாரத்தில் ஒரு நாள் இவை அனைத்தையும் கலந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுத்தால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.

தண்ணீர் அளவு

ஒரே மாதிரியான தீவனங்களைக் கொடுத்தால் கால்நடைகளின் மனோநிலை பாதிக்கப்படும். வெயில் காலங்களில் பசுந்தீவனங்களை அதிகரித்துக் கொடுக்கலாம். அதேபோலக் குளிர் காலத்தில் உலர் தீவனங்களை அதிகமாகக் கொடுக்கலாம். வெயில் காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாகவும், குளிர் காலங்களில் குறைவாகவும் தேவைப்படும்.

மூலிகை மசால் உருண்டைகளைக் கொடுப்பதுடன் சரிவிகித சத்துக்கள் கொண்ட அடர், உலர், பசுந்தீவனங்களைக் கொடுக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில் வளர்க்க வேண்டும். காலை, மாலை வெயிலில் கால்நடைகளை மேயவிடுவதும் கால்நடைகளை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றும். ரத்தத்தில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி நல்ல ஆரோக்கியமாக இருப்பதுடன், நிறைய பாலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.