சமீபத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் உயிர் ஊக்கிகளுக்கான தற்காலிக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.இந்தப் பயிர் உயிர் ஊக்கிகள் அங்கக வேளாண்மையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயிர் ஊக்கிகள் உற்பத்தி செய்வதற்காக ஊக்கத்தொகைகளையும் பல திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பயிர் உயிர் ஊக்கிகள் உயிர் பொருட்களிலிருந்து, குறிப்பாக கடற்பாசிகள், வேளாண் பயிர்கள் மற்றும் பல உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும். அதோடு பயிர் விரைந்து வளர்வதற்கும், புரத்தச்சத்து அதிகப்படுத்துவதற்கும், விளைச்சலை அதிகப்படுத்துவதற்கும் இந்த பயிர் ஊக்கிகள் பயன்படுகின்றன. உவர் நிலங்கள், நீர் சூழ்ந்த நிலங்கள் மற்றும் களர் நிலங்களில் வளரும் பயிகளையும் இந்த ஊக்கிகள் ஊக்கப்படுத்துகின்றன. உயிர் பொருட்களிலிருந்து பெறப்படுவதால் இப்பொருட்கள் அங்கக வேளாண்மையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த உயிர் ஊக்கிகள் தயாரிப்புத் தொழிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் விவசாயிகள் அல்லது விவசாய குழுக்களும் இந்த உற்பத்தியில் ஈடுபடலாம். அதன் மூலம் உயிர் ஊக்கிகள் பயன்பாடு அதிகரிக்கும். இதை அரசு ஆணை மூலம் நெறிப்படுத்துவதன் மூலம் இதற்குத் தக்க இடம் கிடைக்கும். எனவே ரசாயன உரங்களின் உபயோகம் குறையவும் வாய்ப்பிருக்கிறது.