வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பா சாகுபடி தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
வரும் 15-ம் தேதிக்கு முன்பு மழை பெய்தால், குறுகிய கால நெல் ரகங்களான ஆடுதுறை 45, 53,56,57, கோ 51, அம்பை 16 ஆகியவற்றை நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால் மார்கழி பின்பட்டத்தில், குறுகிய கால பயிர்களான பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை சாகுபடி செய்யலாம். ஏற்கனவே நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும்பட்சத்தில், வறட்சியை தாங்கும் தன்மையை ஏற்படுத்தும், ‘பிங்க் பிக்மென்ட்டட் பேக்கல்டேட்டிவ் மெத்தைலோ ட்ராஃபிக் (Pink pigmented facultative methylotrophic (PPFM)’ என்ற உயிரியல் காரணியை, ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து, கைத்தெளிப்பான் மூலமாக வயலில் தெளிக்க வேண்டும்.
கிணறுகள், உறை கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரை தேவைக்கு ஏற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்களில், அனைத்து விவசாயிகளும் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.