Online News Portal on Agriculture

மானாவாரியில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்…

0 45

 

தமிழகத்தில் முதன்மையான பயிர் நெல், நீர்வளம் அதிகமுள்ள பகுதிகளில் அதிகம் சாகுபடியாகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புழுதி நெல் விதைப்பு எனும் மானாவாரி சாகுபடி முறை அதிக பரப்பளவில் நடைபெறுகிறது. மழை குறைவு, அதிக களை மற்றும் ஊட்டச்சத்து குறைவால் விவசாயிகள் குறைந்தளவே மகசூல் பெறுகின்றனர். புழுதி நெல் விதைப்பில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

ஆவணி, புரட்டாசி முதல் தை மாதம் வரை புழுதி விதைப்புக்கு உகந்த பருவம். மானாவாரிக்கு ஏற்ற அண்ணா 4 ரகம் 100 முதல் 105 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு 14.80 குவிண்டால் கிடைக்கும். வறட்சியை தாங்கி வளரும். பாரம்பரிய ரகங்களான சித்திரகார், கருங்கார், ஜோதிமட்டை மானாவாரிக்கு ஏற்றவை.

கோடை மழை பெய்தவுடன் நிலத்தை மூன்று முறை நாட்டு கலப்பை அல்லது ஐந்து கலப்பையால் உழுதால் களைகளின் விதைகள், சிறுகளைகள், பூச்சிகளின் கூண்டு புழுக்களை அழிக்கலாம். முன்பருவ மழை தொடங்கியவுடன் ஏக்கருக்கு 40 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட்டு 2 முறை உழுதால் மண்கட்டிகள் உடைத்து நிலம் பண்பட்டு விதை முளைப்பதற்கு உதவும்.

ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு கரைசலை 1:1 விகிதத்தில் விதையுடன் கலந்து 16 மணி நேரம் ஊற வைத்த பிறகு நிழலில் உலர்ந்த வேண்டும். இதனால் ஆரம்பகட்ட வளர்ச்சியில் ஏற்படும் வறட்சியை எதிர்த்து பயிர் வளரும். ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ விதையை நிலத்தில் தூவி விதைக்க வேண்டும் அல்லது நாட்டு கலப்பையால் உழுதபின் வரிசை முறையில் விதைக்க வேண்டும். நெல் விதைக்கும் கருவி இருந்தால் குறைந்தளவு விதையை சரியான இடைவெளியில் விதைக்கலாம்.

விதைக்கும்போது ஒரே இடத்தில் அதிக பயிர்கள் முளைத்திருக்கும். விதைத்த 12 முதல் 15 நாட்களுக்கு பிறகு செடிகளை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் விதைகளை தூவ வேண்டும். களை கொத்து கருவியால் கிளறிவிடுவதன் மூலம் சரியான எண்ணிக்கையில் பயிர்களை பராமரிக்கலாம். விதைத்த 21 முதல் 27 நாட்களுக்குள் கையால் முதல் களை 35 முதல் 42 நாட்களுக்குள் 2வது களை எடுக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை இருந்தால் ‘பிஸ்பைரிபாக் சோடியம்’ களைக்கொல்லியை பயிர் முளைத்து 2 முதல் 3 இலைகள் வந்தவுடன் ஏக்கருக்கு 100 மி.லி. வீதம் தெளிக்க வேண்டும். பிறகு 45வது நாளில் ஒருமுறை கையால் களை எடுக்க வேண்டும். கோடையில் ஆட்டுக்கிடை அமைத்து மண்வளத்தை பெருக்கலாம். அடியுரமாக 2 டன் தொழுவுரத்துடன் 50 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். விதைத்த 25ம் நாளில் 40 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ் 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமிட வேண்டும்.

எதிர்பார்த்த அளவு மழை இல்லையெனில் பயிர் வளர்ச்சி குறைந்துவிடும். நானோ யூரியா எனும் திரவ தழைச்சத்தை விதைத்த 25ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. கலந்தும் 45வது நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மி.லி. கலந்து இலைவழியாக தெளித்தால் மகசூல் அதிகரிக்கும். குலைநோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியாவால் இலை கருகல் போன்றவை நெற்பயிரை தாக்கும். விதைகளை திரம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியால் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ வேப்பம்பிண்ணாக்கை இடுவதன் மூலம் நோய் பரவலை குறைக்கலாம். நோய் தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய் கலந்தோ அல்லது 400 மி.லி. வேப்பங்கொட்டை சாறு கலந்தோ இலை வழியாக தெளித்து கட்டுப்படுத்தலாம். தண்டு துளைப்பான், பச்சை தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.