மா விளைச்சலை குறைக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று தத்துப்பூச்சி. மரத்தின் பூங்கொத்துகளில் இவை முட்டையிடுகிறது. பூக்கும் தருணத்தில் குஞ்சுகளும் தத்துப்பூச்சியும் பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுவதால் பூக்கள் வாடி கருகி உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சுகள் பிடித்தாலும் சிறு பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை இலையின் மேற்பரப்பில் சுரப்பதால் இலைகளில் கரும்பூசணம் படர்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதித்து மகசூல் குறைகிறது.
இப்பூச்சியை கட்டுப்படுத்த தோட்டத்தில் களைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஒரு பூங்கொத்தில் 5க்கும் மேற்பட்ட தத்துப்பூச்சிகள் இருந்தால் ‘இமிடாகுளோப்ரிட்’ மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 0.3 மி.லி. கலந்து ஆரம்ப நிலையிலேயே தெளிக்க வேண்டும். பிஞ்சு உருவாகும்போது ‘தையாமத்தாக்சைம்’ மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 0.2 கிராம் கலந்து தெளிக்கலாம் அல்லது ‘அசிபேட்’ மருந்தை 1.5 கிராம் அல்லது ‘பாசலோன்’ மருந்தை 1.5 மி.லி. என்ற வீதத்தில் மரம் பூக்க ஆரம்பத்தில் இருந்து 15 நாள் இடைவெளியில் 2 முதல் 3 முறை தெளிக்க வேண்டும்.