Online News Portal on Agriculture

வேளாண்மையில் வன விலங்குகளால் ஏற்படும்  சாகுபடி  பாதிப்பு மேலாண்மை பயிற்சி மற்றும்   விழிப்புணர்வு முகாம்

திருச்சி புத்தாநத்தம் கிராமத்தில் நடை பெற்றது.

0 54

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாரம் புத்தாநத்தம் கிராமத்தில் கிரியா அறக்கட்டளை, திருச்சி (CREA) மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை , திருச்சிராப்பள்ளி இணைந்து நடத்திய ‘வேளாண்மையில் வன விலங்குகளால் ஏற்படும்  சாகுபடி  பாதிப்பு மேலாண்மை பயிற்சி மற்றும்   விழிப்புணர்வு முகாம்’ நடை பெற்றது.

 

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த  திருச்சி வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) திருமதி.ஆனந்தசெல்வி பேசும் பொழுது  ‘அண்மை காலத்தில் மலை பகுதிகள் ,வனப்பகுதிகள் ஒட்டிய கிராமங்களில் வனவிலங்குகளால் வேளாண்மையில் விளைச்சல் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள்  தெரிவித்து வருகின்றனர். வனவிலங்குகளை விரட்ட அதிக சத்தத்தில் ஓசை எழுப்புதல். தீ பந்தங்களை கொண்டு விரட்டுதல் போன்ற பாரம்பரிய முறைகளை கையாளுகின்றனர். குறிப்பாக மணப்பாறை புத்தாநத்தம் பகுதியில் காட்டெருமை நடமாட்டம் காணப்படுகிறது. வன விலங்குகளை பொறுத்தவரை தண்ணீர் மற்றும் உணவினை தேடி வருகின்றன. வன விலங்கு நடமாட்டம் காரணமாக  விளைச்சல்  பாதிப்பு ஏற்படுகிறது .வன விலங்குகளால் ஏற்படும்  சாகுபடி  பாதிப்பை தவிர்க்க  ஓரே பயிரை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். வனவிலங்குகள் தோட்டத்தில் நுழையா வண்ணம் முள் செடிகள் கொண்ட உயிர் வேலிகளை அமைக்கலாம். வனவிலங்குகள் மூலம் அதிக அளவில் சேதாரம் ஏற்படும் பொழுது வனத்துறையினர் உதவியை நாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

கிரியா அறக்கட்டளை வேளாண் வல்லுநர் முனைவர் கே.சி.சிவபாலன்  பேசும்பொழுது “வேளாண்மை சாகுபடியில் எலிகள் மூலம்  ஏற்படும் சேதாரம் 15%  ஆகவும், பறவைகள்  மூலம்  சேதாரம் 9%  ஆகவும் உள்ளது . காட்டுப்பன்றிகள் மூலம் பல்வேறு பயிர்களுக்கு ஏற்படும் சேதம் 15-40% சதவிகிதமாக உள்ளது.  யானைகள் 20-50%, சதவிகித  சேதாரத்தை உண்டு பண்ணுகின்றன. காட்டெருமைகள் மூலம் 5-10%  பயிர் சாகுபடியில் சேதம் ஏற்படுகிறது  என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது நவீன முறையாக காட்டெருமைகள் போன்ற சேதம் விளைவிக்கும்  விலங்குகளை பயிர்களை நெருங்க விடாமல் விரட்ட பயன்படும்  ‘விலங்கு விரட்டி’ பிரபலம் அடைந்து வருகிறது . இந்த விலங்கு விரட்டி  கரைசலை  விலங்குகள் அதிகம் வரும் வழி தடங்களில்,  வேலிகள் மற்றும்  வரப்பு ஓரங்களில் தெளிக்க வேண்டும். இந்த விலங்கு விரட்டி, சுற்று சூழலுக்கு மாசு விளைவிக்காத திரவம் ஆகும். மேலும் விலங்குகளுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் அதை விளைநிலங்களில் இருந்து விரட்ட பயன்படுகிறது . சாகுபடி  சேதாரத்தை ஒருங்கிணைந்த முறைகள் மூலம்  மட்டுமே குறைக்க முடியும் என தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியின் இறுதியில் பயிர்களை மோசமாக அழிக்கும் காட்டு, ப்பன்றிகள்,காட்டெருமைகள்   விரட்ட பயன்படும்  ‘விலங்கு விரட்டி’ தெளிப்பு  குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மணப்பாறை வேளாண்மை அலுவலர் கண்ணன் வரவேற்றார்.  திருமதி.புவனேஸ்வரி  வேளாண்மை அலுவலர்  (உழவர் பயிற்சி நிலையம்) நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளார் சத்திய சீலன் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில்  முன்னோடி விவசாயிகள் பாண்டியன், இளையராஜா உட்பட 12 கிராமங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட  உள்ள விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

 

 

.,

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.