மாடித்தோட்டம் அமைக்க இலவச பயிற்சி அளிக்கிறது தோட்டக்கலைத்துறை.வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலரும் மாடித்தோட்டம் மூலமாக குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்தும் வருகிறார்கள். புதிதாக மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு உற்பத்தியில் இறங்கினால் நல்ல மகசூல் எடுக்க முடியும். இதற்கான பயிற்சியை ஆங்காங்கே சிலர் வழங்கி வருகிறார்கள். அதற்கு கட்டணமாக 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கிறார்கள். இந்நிலையில் தோட்டக்கலைத்துறை இலவசமாக பயிற்சி வழங்கி வருகிறது.
உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளை (27.07.2023) மற்றும் ஞாயிறு (30.07.2023) இந்த பயிற்சி வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு ஆடிப்பட்டம் காய்கறி விதைகள் வழங்கப்படும்.