“என்னோடது செம்மண் சரளை வகை நிலம். கிணற்று நீர் பாசனம். ஆனி மாசம் கொத்தமல்லி தழைக்காகப் பயிர் செய்யலாமா? வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, செடி அவரை, மிளகாய், செண்டுமல்லி போன்றவை பயிர் செய்யலாமா? இந்த மாதம் எவ்வகையான பயிர் செய்வது நல்ல பலன் தரும்?”
– விக்னேஷ், வீரவநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
இவரது கேள்விக்கு விளக்கமளிக்கிறார் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ்,
”நீங்க சொன்ன நிலத்துல, நீங்க சொன்ன பயிர்கள் எல்லாமே பயிரிடலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை. பொதுவா சரளை மணல் நிலத்துல தழைச்சத்து இருக்காது. மண்ணுல ஒட்டக்கூடிய தன்மை இருக்காது. எந்தப் பொருளைக் கொடுத்தாலும் ஒட்டணும். ஆனா, அந்த மண்ணுல ஒட்டுற மட்குப்பொருளோட அளவு ரொம்ப கம்மியா இருக்கும். உதாரணத்துக்குக் கொத்தமல்லியை தழைக்காகச் சாகுபடி பண்ணும்போது அங்க தழைச்சத்து அதிகமா இருக்கணும். மண்ணுல நீங்கக் கொடுக்குறதை பயிருக்கு எடுத்துக் கொடுக்கணும்.
மணலுக்கு இடையில இருக்குற ஓட்டையோட அளவு பெருசா இருக்கும்போது தண்ணி கொடுத்தா, ஒரு மணி நேரத்துல தண்ணி படபடன்னு இறங்கி கீழே போயிடும். அதேமாதிரி நீங்கக் கொடுக்குற இடுபொருட்களையும் எடுத்துட்டு போயிடும். வேர் இருக்குறது மேல. இடுபொருட்கள் கீழே போயிடுச்சுன்னா நமக்குப் பிரயோஜனம் இல்லாம போயிடும். அதனால ஒரு தடவையாவது சணப்பு, தக்கைப்பூண்டு ரெண்டும் சேர்த்து 25 கிலோ வர்ற அளவுக்குத் தூவிவிடுங்க. அதை முறையா விவசாயமா பண்ணி, 55 நாள்ல மடக்கி உழுதுட்டு அதுக்கப்பறம் 10 நாள் விட்டு அடுத்த விவசாயத்தை ஆரம்பிங்க.
அடுத்து, கையில போதுமான அளவு இடுபொருட்கள் வெச்சுக்கணும். இத்தனை பயிர் சொல்றீங்க. தேவையான மீன் அமிலம், இ.எம். கரைசல் ரெண்டும் கையில இருக்கணும். இ.எம். கரைசல் கொடுக்கக் கொடுக்க மண்ணு உடைஞ்சு கொடுத்து தூளாகும். இதை ஒரு வருஷத்துல நீங்க உணர முடியும். ஈரம் நிக்குற அளவு நல்லாருக்கும். அதுக்கு காரணம் இ.எம். கரைசல் தான். மாசம் ரெண்டு தடவை ஜீவாமிர்தம் கொடுக்கணும்.
உயிர் உரமான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் வேணும். பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா இதெல்லாம் கையில வச்சுக்கணும். ஒரு ஏக்கருக்கு, ஒரு மாசத்துக்கு 30 கிலோ சாம்பல் போடணும். அப்படி போட்டுட்டு பொட்டாஷ் சிமுலைசிங் பாக்டீரியா போட்டோம்னா சூப்பரா இருக்கும். பாஸ்போ பாக்டீரியா ஆரம்பகாலத்துல ஒரு லிட்டரும், பூக்க ஆரம்பிச்ச பிறகு 2 லிட்டரும் கொடுக்கணும். 15 நாளைக்கு ஒரு தடவை கொடுக்கணும்.
நீங்கச் சொல்லியிருக்க பயிர்கள் எல்லாம் ஒரே அளவு தண்ணீர் தேவைப்படுற பயிர்கள்தான். அதுனால பிரச்சனையில்ல. வேலையாட்களைப் பொறுத்து எது கம்மியா போடலாம், எது கூடப் போடலாம்னு பார்த்து பண்ணுங்க. வேலியைச் சுத்தி 5 அடிக்கு ஒரு ஆமணக்கு நடுங்க. அது ரொம்ப முக்கியம். அதேமாதிரி வேலிகள்ல தட்டைப்பயிறு நடுறதும் ரொம்ப நல்லது.
சூரிய ஒளியில இயங்கக்கூடிய விளக்குப்பொறி ஒன்னோ ரெண்டோ வாங்கி வைங்க. மஞ்சள் நிற ஒட்டும் அட்டை 20 எண்ணிக்கையில வாங்கி வைங்க. கட்டமைப்பைச் சரியா வச்சு செஞ்சீங்கன்னா நிச்சயம் முழுமையான வெற்றி கிடைக்கும். நாட்டு விதை வேணும்னா பெங்களூர்ல IIHR(Indian Institute of Horticulture Research – Bangalore) -ல நெட்ல போட்டு வாங்கிக்கங்க. இல்ல ஹைப்ரிட் ரகங்கள்னா பாக்கெட் விதையை வாங்கிடுங்க. எதுனாலும் நல்ல விதையா கேட்டு வாங்கிக்கங்க
தொடர்புக்கு : பிரிட்டோ ராஜ் : 99444 50552